சிறுபாக்கம் பகுதியில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரவள்ளி பயிரை வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

சிறுபாக்கம் பகுதியில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரவள்ளி பயிரை வேளாண் விஞ்ஞானிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Update: 2023-10-26 19:00 GMT

சிறுபாக்கம், 

சிறுபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள மங்களூர், கொத்தனூர், வரம்பனூர், பூலாம்பாடி, மா.புதூர் உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் மரவள்ளி பயிரை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். நன்கு வளர்ந்த நிலையில் மாவு மற்றும் செம்பேன் பூச்சி தாக்குதலால் தற்போது மரவள்ளி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் நடராஜன், வீரமணி, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் அருள்தாசன், சிவக்குமார் உள்ளிட்டோர் சிறுபாக்கம் பகுதியில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரவள்ளி பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் அங்கிருந்த விவசாயிகளிடம், செம்பேன் பூச்சி பாதிப்பு உள்ள வயல்களில் பைரோமீசிபைன் என்கிற மருந்தை 0.80 அல்லது புராப்பர்கைட் 2 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒட்டு திரவத்துடன் கலந்து மரவள்ளி இலையின் பின்பகுதியில் படும்படி தெளிக்க வேண்டும்.

வேப்ப எண்ணெய்

மேலும் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் 2 சதவீதம் அல்லது அசாடிராக்டின் 1500 மருந்து 5 மில்லி மற்றும் 1 மி.லி. டீப்பால் ஒட்டும் திரவத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் செடிகளின் அடிப்பாகம் வரை நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். மாவு பூச்சி தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தையொமீத்தாக்சிம் பூச்சி கொல்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 0.50 கிராம் அளவு கலந்து அடிப்பாகம் நன்கு நனையும் வகையில் தெளிக்க வேண்டும். இ்வ்வாறு செய்தால் பூச்சி தாக்குதலை முற்றிலும் தடுக்க முடியும் என்றனர். அப்போது தோட்டக்கலை துணை அலுவலர் செல்வக்குமார், உதவி அலுவலர் சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்