மழை பாதிப்புகளை வேளாண்மை துறையினர் முழுமையாக கணக்கிட வேண்டும்

மழை பாதிப்புகளை வேளாண்மை துறையினர் முழுமையாக கணக்கிட வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-02-07 18:45 GMT

மழை பாதிப்புகளை வேளாண்மை துறையினர் முழுமையாக கணக்கிட வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தி உள்ளார்.

ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மகாபாரதி தலைமையில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள், குறித்த ஆய்வு கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

அனைத்துத்துறை அலுவலர்களும் திட்டங்களை செயல்படுத்துவதில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வேளாண்மை துறை, பள்ளிக் கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலன் துறை, போன்ற துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும்.

முழுமையாக கணக்கிட வேண்டும்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மழையினால் பாதிக்கப்பட்ட பாதிப்புகளை வேளாண்மை துறையினர் முழுமையாக கணக்கிட வேண்டும். 33 சதவீதத்திற்கும் மேல் பாதிப்புக்கு உள்ளான நெற்பயிர்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். கூட்டுறவு துறையும், வருவாய்த் துறையும் இணைந்து முழுமையாக இலவச வேட்டி,சேலைகளை வழங்க வேண்டும்.

மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழற்சி முறையில் கடன் உதவி வழங்க வேண்டும். வருவாய்த் துறையின் மூலம் பொதுமக்கள் விண்ணப்பித்துள்ள பட்டா மாற்றம் தொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது தீர்வு காணவேண்டும்.

அடிப்படை வசதிகள்

சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை வேண்டி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு விதிகளுக்கு உட்பட்டு மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும். பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசு பள்ளிகளில் வகுப்பறைகளையும், வளாகங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

ஊரக வளர்ச்சித் துறையினர் கிராமங்களில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். குறிப்பாக குடிநீர், தெரு விளக்கு, சாலை உள்ளிட்ட வசதிகள் குறித்து உறுதி செய்ய வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு நல்ல பெயர் பெற்று தர வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ்,ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்