வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை அவசர சட்டம் மூலமாக நிறைவேற்ற வேண்டும்-செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை அவசர சட்டம் மூலமாக நிறைவேற்ற வேண்டும் என ஏலகிரி மலையில் நடந்த தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்
திருப்பத்துார் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள கோடை விழா அரங்கில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் காமராஜ், பொருளாளர் முரளிபாபு, செயலாளர் கார்த்திகேயன், காஞ்சீபுரம் எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர் துணைத் தலைவர் தேவகுமார் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை தேவராஜி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. எனவே வழக்கறிஞர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கும் வகையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அவசர சட்டம் மூலமாக நிறைவேற்ற வேண்டும்.
வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தை பயன்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்து மருத்துவ அட்டை வழங்க வேண்டும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் பயணித்து மக்கள் சேவையாற்றும் வழக்கறிஞர்களின் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் (டோல்கேட்) கட்டண வசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த நீதிமன்றம்
வாணியம்பாடியில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் 120 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு பல்வேறு மாவட்ட நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றம் ஆகியவைகள் அமைக்கப்பட்டும், தனித்தனி இடங்களில் இயங்கி வருகிறது. ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில் வாணியம்பாடியில் மட்டும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் இல்லாத நிலை உள்ளது. இதனை ேபாக்கி அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் அமைக்க வேண்டும். சிவில் நீதிபதிகளின் நியமன தேர்விற்கு குறைந்தபட்சம் 3 வருட வழக்கறிஞர் தொழில் அனுபவத்தை நிர்ணயிக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் துணைத்தலைவர் தரணிதரன் நன்றி கூறினார்.