கோலாகலமாக நடந்த ஆடிப்பெருக்கு விழா

மயிலாடுதுறை துலாகட்ட காவிரி கரையில் கோலாகலமாக ஆடிப்பெருக்கு விழா நடந்தது.

Update: 2023-08-03 18:45 GMT


மயிலாடுதுறை துலாகட்ட காவிரி கரையில் கோலாகலமாக ஆடிப்பெருக்கு விழா நடந்தது.

ஆடிப்பெருக்கு

ஆடி பதினெட்டாம் நாளன்று, பெருக்கெடுத்து ஓடும் காவிரி கரையின் இருபுறமும் திரளும் டெல்டா மாவட்ட மக்கள், பூ, பழம், மஞ்சள், கருகமணி உள்ளிட்ட மங்கள பொருட்களை வைத்து, தங்களை காக்கும் தாயாக போற்றி காவிரியை வழிபடுவது வழக்கம். அதோடு ஆடி மாதத்தில் பிரிந்திருக்கும் புதுமண ஜோடிகள், காவிரி கரைக்கு வந்து தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலையை ஆற்றில் விடுவர்.

மேலும், கணவருக்கு நீண்ட ஆயுளும், நீடித்த செல்வமும் வழங்க வேண்டும் என்று சுமங்கலி பெண்கள் அனைவரும் காவிரித்தாயை பிரார்த்தித்து, தங்களது தாலியை பிரித்து புதுத்தாலியை கட்டுவர். இளைய பெண்களுக்கும் கட்டிவிடுவர். இத்தகைய பாரம்பரிய விழாவான ஆடிப்பெருக்கை மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரிக்கரையில் நேற்று பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

துலாக்கட்ட காவிரிக்கரை

அதிகாலை முதலே பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் கருகமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும் காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி நீராடினர். மேலும் புதுமண தம்பதிகள் தங்களது திருமண நாளின் போது அணிந்து இருந்த மலர் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு கொண்டாடினர்.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மட்டும் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி ஆடிப்பெருக்கை கொண்டாடினர். இதேபோல காவிரிக்கரையின் இரு பகுதியிலும் பல இடங்களிலும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நீராடி கொண்டாடினர்.

பூம்புகார் சங்கமத்துறை

ஆண்டுதோறும் விவசாயம் செழித்திட உறுதுணையாக இருக்கும் காவிரி ஆற்றை ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கன்று வணங்கி வழிபடுவது தமிழர்களின் பண்டைய மரபாகும். ஆண்டுதோறும் பூம்புகார் சங்கம துறையில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

ஆனால் நேற்று ஆடிப்பெருக்கை ஒட்டி பூம்புகார் காவிரி சங்கமத்தில் அதிகாலை முதலே பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. குறைந்த அளவு புதுமண தம்பதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து காவிரி தாயை வழிபட்டு சென்றனர்.

காவிரி தீர்த்த படித்துறை

இதேபோல குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் காலை முதலே ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. மேலும் கள்ளி மர பலகைகள் மற்றும் பிளைவுட் எனப்படும் ஒட்டுப்பலகை கொண்டு தயாரிக்கப்படும் சப்பரத்தில் வண்ண,வண்ண காகிதங்களை கொண்டும் தங்களுக்கு பிடித்த தெய்வங்களின் படங்களை ஒட்டியும் தங்களது வீடுகளில் இருந்து காவிரியாறு உள்ளிட்ட அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சிறுவர் சிறுமியர்கள் இழுத்து செல்வதில் மிகுந்த ஆனந்தமடைவார்கள். கடந்த ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொலிவிழந்த ஆடிப்பெருக்கு விழா இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு படையல் இட்டு ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்