வடகிழக்கு பருவமழை : கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக மேற்கொண்ட நடவடிக்கையே திமுக அரசை தற்போது காப்பாற்றி இருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்
திமுகவின் இயலாமை,திறமையின்மை காரணமாக மழைநீர் தேங்கி நிற்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பெரம்பூர் பட்டாளம் பகுதியில் நேற்று மழைநீர் வடியாமல் இருந்தது. இதையடுத்து தற்போது மழைநீர் முழுவதுமாக வடிந்து பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் திரு.வி.க. நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணியை முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கூட திமுக அரசு வழங்கவில்லை, இரண்டு நாள் பெய்த மழையையே திமுக அரசால் சரியாக கையாள முடியவில்லை.
மேலும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப் பட்டது. அதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் வடிந்துள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள திமுகவின் இயலாமை காரணமாக மழை நீர் அதிக இடங்களில் தேங்கி நிற்கிறது.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் வழியே அதிமுகவினர் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக மேற்கொண்ட நடவடிக்கையே திமுக அரசை தற்போது காப்பாற்றி இருக்கிறது என்றார்.