ஏற்காட்டில் 46-வது கோடை விழா, மலர் கண்காட்சி-21-ந் தேதி தொடங்கி 8 நாட்கள் நடக்கிறது
ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 21-ந் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது.
ஏற்காடு:
கோடை விழா
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை விடுமுறை நாட்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
4 அமைச்சர்கள் பங்கேற்பு
இந்த விழாவை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியினை தொடங்கி வைக்கின்றனர்.
பின்னர் அவர்கள் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகின்றனர். மேலும் சேலம் மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
5 லட்சம் மலர்கள்
இந்த கோடை விழாவில் குழந்தைகள், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலை துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிரேகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் கார்னேஷன், ஜெர்பரா, ஆந்தூரியம், ஆர்க்கிட் உள்ளிட்ட 5 லட்சம் அரிய வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட உள்ளது. மேலும் 10 ஆயிரம் மலர் தொட்டிகள் மலர் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
மலைப்பகுதிகளில் விளையக்கூடிய பல்வேறு பழங்களை கொண்டு பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்பட உள்ளது. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்பட உள்ளது.
பல்வேறு போட்டிகள்
இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலை ஏற்றம் (டிரக்கிங்), கைப்பந்து போட்டிகள், கயிறு இழுத்தல் போட்டிகள், மாரத்தான், சைக்கிளிங், சிலம்பம், படகு போட்டி, கிரிக்கெட் போட்டிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழுகொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி மற்றும் சுற்றுலாத்துறை, கலைப்பண்பாட்டுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நாள்தோறும் பல்வேறு இன்னிசை, கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
இந்த விழா கடந்த 21-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.