125-வது மலர் கண்காட்சி மே 19-ந் தேதி தொடங்குகிறது

ஊட்டியில் 125-வது மலர் கண்காட்சி மே மாதம் 19-ந் தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

Update: 2023-03-29 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டியில் 125-வது மலர் கண்காட்சி மே மாதம் 19-ந் தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

குழு கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர். அவர்களை மகிழ்விக்க தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நடப்பாண்டில் கோடை சீசனை முன்னிட்டு மலர் மற்றும் பழக்காட்சி குழு கூட்டம் ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை கூடுதல் இயக்குனர் இமானுவேல், இணை இயக்குனர் ராஜாமணி ஆகியோர் காணொலி காட்சி மூலம் பேசினர். கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மே மாதம் வார விடுமுறை நாட்களில் கண்காட்சிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை நடத்துவதற்கான தேதிகள், காட்சி ஏற்பாடுகள் மற்றும் வரவு, செலவு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றி செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

கூட்டத்துக்கு பின்னர் கலெக்டர் அம்ரித் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

125-வது மலர் கண்காட்சி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற மே மாதம் 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 5 நாட்கள் 125-வது மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து வருகை புரியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கண்காட்சி நடத்தப்படுகிறது.

கோத்தகிரி நேரு பூங்காவில் மே 6, 7-ந் தேதிகளில் 12-வது காய்கறி கண்காட்சி, கூடலூரில் மே 12, 13, 14-ந் தேதிகளில் 10-வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மே 13, 14, 15-ந் தேதிகளில் 18-வது ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 27, 28-ந் தேதிகளில் 63-வது பழக்கண்காட்சி நடைபெறுகிறது. நடப்பாண்டில் மிக சிறப்பாக கண்காட்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சருக்கு அழைப்பு

இதேபோல் மலர் கண்காட்சியையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கவர்னருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ரானா, தோட்டக்கலைத்துறை கூடுதல் இயக்குனர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கருப்புசாமி, துணை இயக்குனர் ஷிபிலா மேரி, ஆர்.டி.ஓ.க்கள் பூஷ்ண குமார், முகமது குதரதுல்லா, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்