பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கைது

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-10-17 20:24 GMT

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.

வழக்கு

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் கடந்த மாதம் 22-ந் தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அங்குள்ள எஸ்.ஆர்.டி.நகர் அருகே பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார், திருப்பூர் மாநகர செயலாளர் கேசவன், ஈரோடு மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக புஞ்சைபுளியம்பட்டி நகர தி.மு.க. செயலாளர் பி.ஏ.சிதம்பரம், புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 25-ந் தேதி சத்தியமங்கலம் அருகே உள்ள அரக்கன்கோட்டை புதூரில் இந்து முன்னணி ஈரோடு மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜை போலீசார் கைது செய்தனர்.

கைது

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையத்தில் உள்ள வீட்டில் வைத்து இந்து முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமாரை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், இந்து முன்னணியினர் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் செந்தில்குமாரை போலீசார் கடத்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்