'மதுவை ஒழிக்க எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து குரல் கொடுக்க தயார்'தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி

மதுவை ஒழிக்க எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து குரல் கொடுக்க தயாராக உள்ளோம் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

Update: 2023-05-16 18:45 GMT


மரக்காணம் அருகே விஷ சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிரந்தரமான தீர்வு

கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மரக்காணம், செங்கல்பட்டில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இ்ந்த உயிரிழப்புகள் அதிர்ச்சியளிக்கிறது.

டாஸ்மாக் என்ற அரசு அனுமதி பெற்று இயங்கிக்கொண்டிருக்கிற கடைகள் இருக்கும்போதே, கள்ளச்சாராயம் இந்தளவுக்கு விற்கப்படுகிறது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை முதல்-அமைச்சர் உடனே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்க ஆணையிட்டு இருக்கிறார்.

இது ஒருவிதத்தில் ஆறுதல் அளித்தாலும் கூட, இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை காண வேண்டும்.

மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்

விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை முழுமையாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு மதுவிலக்கு கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தாத வரை கள்ளச்சாராய விற்பனையை தடுக்க முடியாது.

அரசே மது வணிகத்தை அனுமதித்து நடத்துவது ஏற்புடையது அல்ல. கள்ளச்சாராய விற்பனை குறித்து அரசு கண்டும் காணாமலும் இருந்தால், அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, முதல்-அமைச்சர் அவர்கள், மதுவிலக்கை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

சொத்துக்கள் பறிமுதல்

இதற்கு முதல்கட்ட நடவடிக்கையாக, சிறப்பு உளவுப்பிரிவு குழு ஒன்றை அமைக்க வேண்டும். இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து, கைது செய்து அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

மதுவினால் கணவனை இழந்து விதவைகளாக வாழக்கூடியவர்களின் குடும்பத்தினரை அரசு தத்தெடுத்து, அவர்களுடைய பாதுகாப்புக்காக நிதியை ஒதுக்கீடு செய்து, அவர்களை பராமரிக்க முன்வர வேண்டும்.

கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதற்கான தீவிர முயற்சியை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

எடப்பாடியுடன் சேர்ந்து போராட்டம்

நாங்கள் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி, மதுவை ஒழிப்பதற்காக எங்காவது போராட்டம் நடத்தி இருக்கிறாரா? இனி அவர் மதுவை ஒழிக்க போராட்டம் நடத்துவார் என்றால் அவரோடு சேர்ந்து நாங்கள் குரல் கொடுக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது துரை ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் சேரன், ஆற்றலரசு, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், மயிலம் தொகுதி செயலாளர் செல்வசீமான், ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேந்தன், ஜெயச்சந்திரன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்