தாராபுரம், குண்டடம் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததது. இதனால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
பலத்த மழை
தாராபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகியது.இதனால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள், கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்தது. ஆனால் மாலை 5 மணி முதல் பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.
இதற்கிடையில் நேற்று மாலை 4 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்தது.
.இதனால் தாராபுரம் நகரில் முக்கிய பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதில் பெரியகாளியம்மன் கோவில் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் மழை நீர் புகுந்தது. அதேபோன்று அலங்கியம் சாலை. பூக்கடைக்கார்னர், சின்ன கடை வீதி, அமராவதி ரவுண்டானா போன்ற பகுதிகளில் கழிவு நீருடன் மழை நீர் சேர்ந்து சாலையில் வெள்ளம் போல உருண்டோடியது. இதனால் அப்பகுதிகளில் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் வாகனங்களை இயக்க சிரமம் அடைந்தனர். இருப்பினும் தாராபுரம் பகுதி முழுவதும் பெய்த கனமழை காரணமாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் தாராபுரத்தை சுற்றி உள்ள கிராமங்களிலும் மழை பெய்தது.
குண்டடம்
குண்டடம் பொதுவாகவே வறட்சியான பகுதி என்பதால் பருவமழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர். இங்கு கால்நடைகள் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. காடுகளிலும் புற்கள் கருகி போன நிலையில் நேற்று முன் தினம் கனமழை பெய்தது. தொடர்ந்து நேற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததது.