வளர்ச்சித்திட்ட பணிகள் கால தாமதமாவது ஏன்?

Update: 2022-06-15 14:22 GMT

உடுமலை

உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையன், நிதி ஒதுக்கப்பட்டு இவ்வளவு நாளாகியும் பணிகள் ஏன் காலதாமதமாகிறது என்று கேட்டார்.

உடுமலை நகராட்சியில் வளர்ச்சி பணிகள்

உடுமலை நகராட்சி தொடங்கப்பட்டு 103 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி நூற்றாண்டு விழா நினைவாக உடுமலை நகராட்சி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.48 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் மத்திய பஸ்நிலையம் அருகே பழைய வி.பி.புரத்தில் ரூ.3¾ கோடியில் கூடுதல் பஸ்நிலையம், தங்கம்மாள் ஓடை பகுதிகளில் ரூ.12 கோடியே 97 லட்சத்தில் நடைபாதை மற்றும் தடுப்புசுவர் கட்டுதல், கழுத்தறுத்தான் பள்ளம் (ஓடை) பகுதிகளில் ரூ.15கோடியே 98 லட்சத்தில் தடுப்பு சுவர்கட்டுதல், ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சி வாரச்சந்தையில் ரூ.6 கோடியே 84 லட்சத்தில் மேம்படுத்தும் பணிகள், நகராட்சி பகுதியில்ரூ 5 கோடியே 91 லட்சத்தில் புதியதாக மின் விளக்குகள் அமைத்தல், நகராட்சி அலுவலகத்தில் ரூ.1 கோடியில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், நகராட்சி பகுதியில் 5 பூங்காக்களை ரூ.1 கோடியே 42 லட்சத்தில் மேம்படுத்தும் பணிகள் ஆகியவை செய்யப்பட வேண்டும்.

நிர்வாக இயக்குனர் ஆய்வு

இந்த நிலையில் உடுமலைக்கு வந்திருந்த நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையன், தற்போது மத்திய பஸ் நிலையம் அருகே நடைபெற்றுவரும் கூடுதல்பஸ்நிலையம் கட்டிட கட்டுமான பணிகள், கழுத்தறுத்தான் பள்ளத்தில் நடைபெற்று வரும் பணிகள், தங்கம்மாள் ஓடை தொடங்குமிடமான ஒட்டுக்குளத்திற்கு அருகில் உள்ள பகுதி, தங்கம்மாள் ஓடை ஆகிய இடங்களை பார்வையிட்டார்.

அடுத்து ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சி வாரச்சந்தைக்கு சென்றார். அங்கு வாரச்சந்தை வளாகத்தில், கடைகளை கட்டுவதற்காக பெரிய அளவில் பல குழிகள் தோண்டப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமலிருப்பதை பார்வையிட்டார்.

பணிகள் கால தாமதம் ஏன்?

இதைத்தொடர்ந்து அவர், உடுமலை நகராட்சி வளர்ச்சி திட்டபணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு இவ்வளவு நாட்களாகிறது.ஆனால் இந்த பணிகள் முடியாமல் காலதாமதமாகி வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று, நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் நிறுவனத்தினரிடம் விளக்கம் கேட்டார். மேலும் அவர் பணிகளை விரைவில் செய்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி தலைவர் மு.மத்தீன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் பாலச்சந்திரன், உடுமலை நகராட்சி பொறியாளர்மோகன்,

உதவிப்பொறியாளர் மாலா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்