தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் அரைநாள் தர்ணா போராட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்துறை ஊழியர், வனத்துறை காவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை உரிய காலத்தில் இருந்து நிலுவையுடன் வழங்க வேண்டும். 70 வயதை எட்டும் ஓய்வூதியர்களுக்கு தேர்தல் நேரத்தில் அறிவித்தபடி 10 சதவீத உயர்வை அனுமதிக்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் மணிவேலு வரவேற்றார். முன்னாள் மாநில செயலாளர் நிசார் அகமது தொடக்க உரையாற்றினார். கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார். மாநில துணைத்தலைவர் அரங்கநாதன் சிறப்புரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் மேகவர்ணன் நன்றி கூறினார். நேற்று மதியம் வரை தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.