தரங்கம்பாடி-தருமபுரம் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும்

மயிலாடுதுறையில் குண்டும், குழியுமாக காணப்படும் தரங்கம்பாடி-தருமபுரம் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-10 18:45 GMT


மயிலாடுதுறையில் குண்டும், குழியுமாக காணப்படும் தரங்கம்பாடி-தருமபுரம் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இணைப்பு சாலை

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் மாவட்ட கலெக்டர் பங்களா அருகில் ஆர்.பி.என்.நகர் வழியாக தருமபுரம் சாலைக்கு இணைப்பு சாலை உள்ளது. இந்த இணைப்பு சாலை மாவட்ட கலெக்டர் பங்களா சுற்றுச்சுவர் ஓரத்தில் சென்று அதன் பின்புறமாக ஸ்ரீ ராமஜெயபுரம் நகரை கடந்து அண்ணாநகர் வழியாக தருமபுரம் சாலை சென்றடைகிறது. இந்த அண்ணா நகரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் சுமார் 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் மாணவர்களை ஏற்றி சென்று வருகின்றன. இதன் காரணமாக தரங்கம்பாடி சாலையில் இருந்து ஆர்.பி.என் நகர் வழியாக செல்லும் சாலையில் காலை, மாலை என இருவேளையிலும் பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன.

சேறும், சகதியுமாக

மேலும் மாணவ- மாணவிகள் நடந்தும், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்றும் வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளும் இந்த சாலை வழியே கடந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி அதிகாலை வரை பெய்த கனமழை காரணமாக அந்த சாலையில் குண்டும், குழியுமான இடத்தில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியது. அதில் பள்ளி வாகனங்கள் செல்லும்போது சாய்ந்து கவிழும் வகையில் சென்று வருகிறது.

சேற்றில் விழுந்து சென்றனர்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக அலுவலர் சிவலிங்கம் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இது குறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடமும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். குறிப்பாக இந்த சாலை மாவட்ட கலெக்டர் பங்களா பின்பகுதியில் உள்ளது. இந்த சாலையில் நேற்று மட்டும் நடந்தும், சைக்கிளிலும் சென்ற மாணவ- மாணவிகள் பலர் சேற்றில் விழுந்து எழுந்து சென்றனர்.

மேலும் பள்ளி வாகனங்கள் கவிழும் வகையில் சாய்ந்து சென்றது மனதை பதைபதைக்க வைத்தது. எனவே அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி ஆர்.பி.என்.நகர் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்