தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சுசீந்திரம்:
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆவணி திருவிழா
குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதற்காக நேற்று முன்தினம் கோட்டாறு இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப்பட்டத்தை கொண்டு வந்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
நேற்று காலை 7.30 மணியளவில் கொடி பட்டத்திற்கு கண் திறந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 9 மணிக்கு திருவேங்கடம் விண்ணவரம் பெருமாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் மாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கரநாராயணரூ கொடிப்பட்டத்தை கொடிமரத்தில் ஏற்றினார். பின்னர் கொடிப்பீடத்திற்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.
எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்பு
கொடியேற்ற விழாவில் விஜய் வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்காவலர்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதரன் நாயர் வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிவபிரசாத், தெற்குமண்மடம் ஸ்தானிகர் பிரதீபன் நம்பூதிரி, திலீபன் நம்பூதிரி, சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா, கோவில் கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாமி வேட்டைக்கு புறப்படுதல்
திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு வழிபாடு, அபிஷேகமும், ஆராதனையும் நடக்கிறது. வருகிற 27-ந் தேதி காலை 7 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா வருவதும், 29-ந் தேதி காலை 7 மணிக்கு பல்லக்கிலும், இரவு 7 மணிக்கு சின்ன சேஷ வாகனத்திலும் சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.
31-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் இந்திர வாகனமாகிய சப்பர தேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளி 4 ரத வீதிகளில் உலாவருவதும், இரவு 7 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா வருவதும், 9 மணிக்கு கோவில் மேற்கு வாசல் முன் சாமி வேட்டைக்கு புறப்பட்டு அம்பு எய்தலும் நடக்கிறது. அடுத்தமாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி காலை 10 மணிக்கு ஆராட்டு நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தினரும், அறங்காவலர் குழுவினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.