தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பல்கலைக்கழக வேந்தருடன் சந்திப்பு

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பல்கலைக்கழக வேந்தரை சந்தித்து பேசினர்.

Update: 2023-09-03 18:30 GMT

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் விமானவியல் துறையின் முன்னாள் மாணவர்களான (2013- 2017) திருச்சியை சேர்ந்த நித்தீஷ், புஷ்பராஜ், கடலூரை சேர்ந்த மணிமாறன், கணேசன், வேல்முருகன் செல்வராஜ் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் டி.ஏ.வி. சிஸ்டம்ஸ் என்ற மின்சாரத்தினால் இயங்கும் சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தை ஆஸ்திரேலியாவின் பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் கடந்த 2020-ம் ஆண்டு நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இந்த சைக்கிள் ஒரு முறை சார்ஜ் செய்தால் (5 ரூபாய் கட்டணத்தில்) 120 கிலோமீட்டர் தூரத்தை கடக்க முடியும். ஆஸ்திரேலியாவில் இந்த நிறுவனத்தின் மூலம் 20-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனம் சென்னையில் தொடங்கி 100-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது. சென்னையில் உற்பத்தி செய்யப்படும் மின்சார சைக்கிள்கள் ஆஸ்திரேலியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தநிலையில் தமிழகத்திற்கு வந்த நித்தீஷ், புஷ்பராஜ், மணிமாறன், கணேசன், வேல்முருகன், செல்வராஜ் ஆகியோர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதுகுறித்து நித்தீஷ் கூறுகையில், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பயிலும் போது பெற்ற அறிவும், அனுபவமும், பேராசிரியர்களின் ஊக்கமும் மற்றும் பல்கலைக்கழக வேந்தரின் உந்து சக்தியாலும் தான் எங்களால் வெற்றிபெற முடிந்தது. மேலும் எங்களுடைய சைக்கிளானது இந்திய சாலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்த சைக்கிள் மற்ற வாகனங்களை விட எடை குறைவாக இருப்பதனால் விவசாயிகள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வகை சைக்கிள்கள் சுற்றுப்புற சூழலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படுத்தாது என்பது இதன் சிறப்பு அம்சமாகும் என்றார்.

இதுகுறித்து பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் கூறுகையில் "விமானத்தை கண்டறிந்த ரைட் சகோதரர்கள் முதலில் சைக்கிளை கண்டுபிடித்து அதன் பிறகு விமானத்தை வடிவமைத்தனர். அதுபோல் நீங்களும் மிகப்பெரிய கண்டுபிடிப்பை உலகுக்கு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். மேலும் உங்களுடைய அறிவையும், அனுபவத்தையும் நமது கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களையும் உங்களைப்போன்று எதிர்காலத்தில் தொழில் முனைவோராக மாற தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன், கல்வி முதன்மையர் அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்