ரூ.605 கோடியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம்-அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்
நெல்லை மாவட்டத்தில் 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.605 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.
ராதாபுரம்:
நெல்லை மாவட்டத்தில் 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.605 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம்
நெல்லை மாவட்டம் ராதாபுரம், வள்ளியூர், நாங்குநேரி, களக்காடு, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.605.75 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
விழாவிற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வரவேற்றார்.
அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்கள் துறையின் எல்லா புகழும் முதல்-அமைச்சரையே சேரும். ஜல் ஜீவன் திட்டத்தில் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய நேரத்தில் காலதாமதம் இல்லாமல் குடிநீர் கொடுப்பதுதான் எங்கள் கடமை. இந்த தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் அனைத்தும் 18 மாதங்களில் நிறைவடைந்து அனைவருக்கும் குடிநீர் வழங்கப்படும். பல்வேறு சிறப்பு திட்டங்களை கடந்த 24 மாதங்களில் செயல்படுத்திய முதல்-அமைச்சருக்கு பொதுமக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்
சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-
மேலமுன்னீர்பள்ளம் அருகே தாமிரபரணி ஆற்றில் இருந்து நபர் ஒருவருக்கு 55 லிட்டர் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.605 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ராதாபுரம் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து வரும் நீர் உப்புநீராக இருக்கிறது. இதையடுத்து பொதுமக்களின் குடிநீர் பிரச்சினை குறித்து முதல்-அமைச்சரிடம் கூறியதை தொடர்ந்து தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டப்பணிகள் 18 மாதத்துக்குள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும்போது குடிசை முதல் கோபுரம் வரையுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான குடிநீர் வழங்கப்படும். பணகுடி, வள்ளியூர், திசையன்விளை பேரூராட்சி பகுதிகளில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் கொடுக்கும் திட்டப்பணிகள் இன்னும் 2 மாதங்களில் ஆரம்பித்து 1½ ஆண்டுகளில் முடித்து வீடுகளுக்கு தண்ணீர் கொடுக்கப்படும்.
அரசு தலைமை மருத்துவமனை
வள்ளியூர் பகுதியில் அமைய இருக்கும் நெல்லை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி அடிக்கல் நாட்டப்படுகிறது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் 295 பள்ளிகளில் தலா ஒரு ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அரசு ஏழைகள், சாமானிய மக்களுக்காக செயல்படும் அரசு. எந்த திட்டத்தையும் குறுகிய எண்ணத்தில் பார்க்காமல் முதல்-அமைச்சர் மக்கள் பயன்பெறும் வகையில் பரந்த மனப்பான்மையுடன் செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி திட்ட விளக்க உரை ஆற்றினார்.
ரூ.1 கோடி கடனுதவி
விழாவில் சமூகரெங்கபுரம் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பினருக்கு கடனுதவியாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, ஞானதிரவியம் எம்.பி., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அலெக்ஸ் அப்பாவு, நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின், வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கண்ணன், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கப்பாண்டியன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பரமசிவ அய்யப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இரா.ஆ.பிரபாகரன், எஸ்.ஏ.கே.சித்திக், ஒன்றிய செயலாளர்கள் பி.சி.ராஜன், போர்வெல் கணேசன், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி தலைவர் இசக்கிபாண்டியன், நாங்குநேரி நகர செயலாளர் வானமாமலை, மூலைக்கரைப்பட்டி நகர செயலாளர் முருகையா பாண்டியன், மாவட்ட கவுன்சிலர்கள் எம்.ஏ.கனகராஜ், எஸ்.சாலமோன் டேவிட், ஜான்ஸ்ரூபா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சமூகை முரளி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ரகுபதி நன்றி கூறினார்.
புதிய பஸ் நிலைய பணி
முன்னதாக வள்ளியூர் நகர பஞ்சாயத்து சார்பில் ரூ.12.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கும் வள்ளியூர் புதிய பஸ் நிலைய பணிகளை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், மனோ தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.