உடல்நலம் பாதித்தவரை தொட்டில் கட்டி தூக்கி வரும் அவலம்

உடுமலை வனப்பகுதியில் பாதை வசதி இல்லாததால் உடல் நலம் பாதித்தவரை தொட்டி கட்டி தூக்கி வரும் அவல நிலை உள்ளது.

Update: 2023-07-18 17:35 GMT

உடுமலை வனப்பகுதி

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, ஈசல்தட்டு, பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு தேவையான குடிநீர், பாதை, வாகனவசதி, மின்சாரம், வீடு என அடிப்படைத் தேவைகள் இதுவரையிலும் முழுமையாக பூர்த்தி செய்து தரப்படவில்லை. இதனால் அடிப்படை தேவைகள் மற்றும் அவசரகால உதவிகளை விரைந்து பெற முடியாமல் மலைவாழ்மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட குறுமலை மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

நோயால் தவித்த அவரை மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி சிகிச்சைக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக தூக்கி வந்தனர். பாதைவசதி இல்லாத காரணத்தினால் சிகிச்சைக்கு விரைந்து செல்ல இயலவில்லை.

திடீர் உடல்நலக்குறைவு

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வருகின்ற எங்களுக்கு பாதை வசதி அவசரகால உதவிகளை பெறுவதற்கு முக்கியமான ஒன்றாகும். ஆனால் இன்று வரையும் பூர்த்தி அடையாமல் உள்ளதால் விபத்து, பிரசவம், எதிர்பாராத நிகழ்வு, திடீர் உடல் நலக்குறைவு உள்ளிட்டவைக்கு உடனடியாக சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இந்த சூழலில் குறுமலை மலைவாழ் குடியிருப்பில் பழனிச்சாமி என்பவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவரை தொட்டில் கட்டி தூக்கி வந்து அடிவாரப் பகுதியை அடைவதற்குள் நீண்ட நேரம் ஆகிவிட்டது. அதன் பின்பு வாகனத்தை பிடித்து ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சைக்கு சேர்த்தோம்.

பாதை அமைக்க அனுமதி

இதுவே பாதை வசதி இருந்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை பெற இயலும். எங்களது தொடர் போராட்டத்தின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமூர்த்திமலை முதல் குறுமலை வரை பாதை அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அந்த பணியை விரைந்து முடித்து எங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

இதனால் அடிப்படை அத்தியாவசிய தேவை மற்றும் அவசரகால உதவிகளை விரைந்து பெறுவதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்