மலைவாழ் கிராமங்களில் சாலை அமைக்க அரசு அனுமதி
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் மலைவாழ் கிராமங்களில் சாலை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி பொது மக்கள் இனிப்புகள் வழங்கியும்,பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காத்திருப்பு போராட்டம்
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.
இங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான குடிநீர், பாதை, வாகனவசதி, மின்சாரம், வீடு என அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்து தரப்படவில்லை.
அதைத்தொடர்ந்து தரைப்பகுதியில் இருந்து மலைப் பகுதிக்கு செல்வதற்கு 2006-ம் வருட வனஉரிமைச் சட்டப்படி பாதை அமைக்க தடையின்மை சான்றும், ஆறுகளை கடந்து செல்லும் மலைவாழ் மக்களுக்கு பாலங்கள் கட்ட தடையின்மை சான்று வழங்க கோரியும், குடிநீர், செல்போன் கோபுரங்கள், சமுதாய நலக்கூடங்கள், பள்ளிக்கூடம், அங்கன்வாடி, நியாய விலை கடை, மருத்துவ வசதி, வீட்டு வசதி, வேளாண்மை செய்ய உதவி, கூட்டுறவு வங்கிக் கடன் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும், வன உரிமை சட்டப்படி வழங்கி உள்ள பட்டாவில் மக்களுக்கு பயன்படாத நிபந்தனைகள் ரத்து செய்ய கோரியும் கடந்த 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்கள் உடுமலை வனச்சரக அலுவலகத்தின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை அமைக்க அனுமதி
வனத்துறை அதிகாரிகள் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
அதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருமூர்த்தி மலை ரோடு முதல் உடுமலை செட்டில்மெண்ட் வரை சாலை அமைக்க 5.37 கிலோமீட்டர் தூரத்திற்கு அனுமதி அளித்து தீர்மானம் வழங்கப்பட்டது. இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு திரும்பிச் சென்றனர்.
நீண்ட கால போராட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து மலைவாழ் கிராமங்களில் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. மலைவாழ்மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இரவு பகலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கைக்குழந்தைகளுடன் போராடி பெற்ற இந்த வெற்றியானது சுதந்திரம் கிடைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளதாக மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.