அய்யப்பன் கோவிலில் தாலப்பொலி உற்சவம்

கோத்தகிரியில் உள்ள அய்யப்பன் கோவிலில் தாலப்பொலி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-12-10 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரியில் உள்ள அய்யப்பன் கோவிலில் தாலப்பொலி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தாலப்பொலி உற்சவம்

கோத்தகிரி கடைவீதியில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த ஆண்டு முதல் கார்த்திகை மாதத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதில் முக்கியமாக தாலப்பொலி உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று கோவிலில் 2-ம் ஆண்டு தாலப்பொலி உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் நிர்மால்ய பூஜை, கேரள செண்டை மேளத்துடன் உற்சவம் தொடங்கியது. காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம், 7.30 மணிக்கு உஷ பூஜை, 8 மணிக்கு அலங்கார பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து காலை 10 மணிக்கு நெய் அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. பின்னர் நடை அடைக்கப்பட்டது.

திருவீதி உலா

இதையடுத்து மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, தொடர்ந்து தாலப்பொலி, செண்டை மேளம் மற்றும் வான வேடிக்கையுடன் அய்யப்ப பகவான் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7.30 மணிக்கு ஹரிவராசனத்துடன் நடை அடைக்கப்பட்டது.

இந்த மகோற்சவ விழாவில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அய்யப்பன் கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்