தக்கோலம்- கனகம்மாசத்திரம் நெடுஞ்சாலையில் ரூ.6 கோடியில் பாலங்கள் அமைக்கும் பணி தீவிரம்
திருவாலங்காடு ஒன்றியம் தக்கோலம்- கனகம்மாசத்திரம் மாநில நெடுஞ்சாலையில் ரூ.6 கோடியில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
அடிக்கடி விபத்து
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் தக்கோலம்- கனகம்மாசத்திரம் மாநில நெடுஞ்சாலை 18 கி.மீ. தூரம் கொண்டது. இந்த நெடுஞ்சாலையை ஒட்டி, 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இணைப்பு சாலைகள் உள்ளன. அதேபோன்று இந்த சாலையின் குறுக்கே ஆறு, ஏரி, ஓடை உள்ளிட்ட கால்வாய்கள் செல்கின்றன. சாலையின் குறுக்கே கால்வாய் நீர் செல்ல அமைக்கப்பட்ட சிறு பாலங்களின் அகலம் குறைவாக இருந்ததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டது. மேலும் இந்த சாலையில் குறுக்கே செல்லும் சிறு பாலங்கள் பழுதடைந்தால் அவற்றை அகற்றி புதிய பாலங்கள் அமைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
ரூ.6 கோடியில்...
அதன் பலனாக கூர்மவிலாசபுரத்தில் 2 பாலங்கள், கோணலம் சாலையில் 2 பாலங்கள், முத்துக்கொண்டாபுரம், அத்திப்பட்டு, திருவாலங்காடு, சின்னம்மாபேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒன்று என மொத்தம் 8 இடங்களில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை வாயிலாக புதிய பாலம் அமைக்க டெண்டர் விடப்பட்டு தற்போது பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகின்றன.
இந்த பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிக்க ஓப்பந்ததாரருக்கு அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட இடங்களில் புதிய பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அந்த சாலை ஆங்காங்கே பள்ளமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணி நடக்கவும், சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.