திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருநாள்

தைப்பூச திருநாளையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதையொட்டி 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-06 10:17 GMT

5 மணி நேரம் காத்திருப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆடிகிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வர்.

இந்த நிலையில் நேற்று தைப்பூசம் மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்கள். இதனால் பொதுவழியில், பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் 5 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

சிறப்பு அபிஷேகம்

அதேபோல் ரூ.100 சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். தைப்பூச விழாவையொட்டி நேற்று அதிகாலை 4½ மணிக்கு மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, தேன் மற்றும் அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்க கிரீடம், மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மாலை 7 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் முருகபெருமான் தேர் வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேலும் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு 3 மின்சார ரெயில் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மத்திய மந்திரி

மத்திய தகவல் தொடர்பு இணை மந்திரி எல்.முருகன் தனது மகனுடன் நேற்று திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

உலக தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படுவது தைப்பூச திருவிழா. கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 6-ந்தேதி திருத்தணி முருகன் கோவிலில் இருந்து வேல் யாத்திரையை தொடங்கினேன். வேல் யாத்திரையின் முக்கிய கோரிக்கையாக தமிழக அரசுக்கு தைப்பூச திருநாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தோம். அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தைப்பூச திருவிழாவை அரசு விடுமுறை நாளாக அறிவித்தது வேல் யாத்திரையின் வெற்றியாக கருதப்பட்டது.

முருகபெருமானின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மத்திய இணை மந்திரி எல்.முருகன் வருகையொட்டி கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்