நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-02-04 19:24 GMT

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தைப்பூச திருவிழா

நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வரும். முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

தீர்த்தவாரி நிகழ்ச்சி

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு என்.எச்.ரோடு ஈரடுக்கு மேம்பாலம் கைலாசபுரம் வழியாக வரலாற்று புகழ்வாய்ந்த சிந்துபூந்துறை தாமிரபரணி ஆற்றின் தீர்த்தவாரி தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினர்.

அங்கு விஷேச பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு பாரதியார் தெரு, தெற்கு புதுத்தெரு, ரதவீதிகளை சுற்றி கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தெப்ப திருவிழா

இன்று (ஞாயிற்றுக்கிழமை) சவுந்தர சபா மண்டபத்தில் வைத்து பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்சி தரும் வைபவமும், நாளை மறுநாள் இரவில் கோவில் வெளி தெப்பத்தில் தெப்ப திருவிழாவும் நடக்க உள்ளது. தெப்பத்தில் சுவாமி, அம்பாள் மற்றும் மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

திருப்புடைமருதூர்

சேரன்மாதேவி அருகே உள்ள திருப்புடைமருதூரில் கோமதி அம்பாள்- நாறும்பூநாதர் சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான தைப்பூசத் தீர்த்தவாரி நேற்று மதியம் தாமிரபரணி நதியில் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி நதியில் சிவ சிவ கோஷத்துடன் புனித நீராடி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அபிஷேகம், தீபாராதனை, இரவில் தெப்ப உற்சவத்தை தொடர்ந்து சுவாமி- அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்