செஞ்சி, விக்கிரவாண்டி பகுதி முருகன் கோவில்களில் தைப்பூச விழா
செஞ்சி, விக்கிரவாண்டி பகுதி முருகன் கோவில்களில் தைப்பூச விழா நடைபெற்றது.
செஞ்சி,
செஞ்சி நகரம் கிருஷ்ணாபுரம் கொத்தமங்கலம் சாலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 43-ம் ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு காலையில் சுப்பிரமணியசாமிக்கு தமிழ் முறை வேள்வி பூஜையும், தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை சாமி வீதிஉலா நடைபெற்றது. பின்னர் மதியம் குருசாமிக்கு மிளகாய் பொடி அபிஷேகமும், அதைதொடர்ந்த தீ மிதி உற்சவமும் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர், கிரேன், லாரி, டிராக்டர் ஆகிய வாகனங்களை இழுத்தும், லாரிகளில் தொங்கியபடியும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் திருமுருகன் சுவாமிகள் மற்றும் கிருஷ்ணாபுரம் கிராம மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி அடுத்த உலகலாம்பூண்டியில் உள்ள வள்ளி தெய்வானை சமேத, முருகப்பெருமான் கோவிலில் நேற்று தைப்பூச விழா நடைபெற்றது. இதையொட்டி முருகனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் உடலில் அலகு குத்தி வாகனங்களை இழுத்து வந்தும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ராஜா தலைமையில் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் முன்னின்று செய்திருந்தனர்.