அரசு பொதுத்தேர்வுக்கு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான படிப்பகம்; கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்
பாளையங்கோட்டை பஸ்நிலைய வளாகத்தில் அரசு பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக புதிதாக படிப்பகம் அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்.
பாளையங்கோட்டை பஸ்நிலைய வளாகத்தில் அரசு பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக புதிதாக படிப்பகம் அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்.
படிப்பகம் திறப்பு
நெல்லை மாநகராட்சி சார்பில் தமிழகத்திலேயே முதல் முறையாக பாளையங்கோட்டை பஸ்நிலைய வளாகத்தில் அரசு பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கான படிப்பகம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் விஷ்ணு, படிப்பகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பாட புத்தகங்கள்
பின்னர் அவர் பேசியதாவது:-
அரசு போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் வசதிக்காக நெல்லை மாநகராட்சி சார்பில் இந்த படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு போட்டி தேர்வுக்கான பொது அறிவு மற்றும் நுழைவு தேர்வுக்கான புத்தகங்கள், நாளிதழ்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் இதர பாடப்புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் குளிர்சாதன வசதி, குடிநீர் வசதி, மாணவர்கள் அமர்ந்து படிக்கும் விதமாக இருக்கைகள், மேஜைகள், கண்காணிப்பு கேமரா, கழிவறை ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. லிப்ட் வசதி உள்ளதால் மாற்றுத்திறனாளி மாணவர்களும் பயன் பெறலாம்.
கருத்தரங்கம்
இந்த மையம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். 50 மாணவர்கள் அமர்ந்து படிக்கலாம். இந்த கல்வி மையத்தை நாள் ஒன்றுக்கு ரூ.12 மட்டும் செலுத்தி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை ஊக்குவிக்கின்ற வகையில் பல்வேறு கருத்தரங்களும் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.