பழனி-கோவை வழித்தடத்தில் மின்சார ரெயில் சோதனை ஓட்டம்

பழனி-கோவை வழித்தடத்தில் மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-28 16:25 GMT

பொள்ளாச்சி

பழனி-கோவை வழித்தடத்தில் மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சோதனை ஓட்டம்

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் மற்றும் பாலக்காடு இடையேயான மீட்டர் கேஜ் ரெயில் பாதை, அகலரெயில் பாதையாக மாற்றப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரையிலான ரெயில் பாதையை மின் மயமாக்க ரூ.159 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கம்பங்கள் நடப்பட்டு ஓயர் இழுக்கும் பணிகள் நடைபெற்றது.

இந்த நிலையில் மின் மயமாக்கும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மதுரையில் இருந்து கோவை செல்லும் ரெயில் நேற்று காலை பழனிக்கு வந்தது. பின்னர் அந்த ரெயிலில் இருந்து டீசல் என்ஜினை மாற்றி விட்டு மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு காலை 10.35 மணிக்கு பழனியில் இருந்து கோவை நோக்கி புறப்பட்டது. அந்த ரெயில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு காலை 11.50 மணிக்கு வந்தது. பின்னர் 2 நிமிடம் கழித்து புறப்பட்டு கோவைக்கு சென்றது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

1335 மின் கம்பங்கள்

பொள்ளாச்சி-போத்தனூர் இடையே ரூ.37 கோடியே 36 லட்சம் செலவில் மின் மயமாக்கும் பணிகள் முடிவடைந்து, மின்சார என்ஜின் கொண்டு கடந்த ஆண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பொள்ளாச்சி-பழனி இடையே உள்ள 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் மயமாக்கும் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் 1335 மின் கம்பங்கள் நடப்பட்டு உள்ளன. மேலும் பழனி, கோமங்கலம்புதுரில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது மதுரையில் இருந்து கோவை செல்லும் ரெயிலில் இருந்து பழனியில் இருந்து மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் திண்டுக்கல்-பழனி இடையே மின் மயமாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ரெயில்வே ஆர்வலர்கள் ஏமாற்றம்

ஏற்கனவே கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை மின் மயமாக்கும் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து பழனி வரை மின் மயமாக்கும் பணிகள் நிறைவடைந்து, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதால் ரெயில்வே ஆர்வலர்கள் ரெயில் நிலையத்தில் அதிகாரிகளுக்கும், பயணிகளுக்கும் வழங்குவதற்கு இனிப்பு வாங்கி வந்தனர். இதற்கு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இனிப்பு வழங்குவதற்கு பாலக்காடு ரெயில்வே கோட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அனுமதி கொடுக்காததால் ரெயில்வே ஆர்வலர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் இனிப்புகளை திருப்பி கொண்டு சென்றனர்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளை கோவை ரெயில் நிலையத்தில் நடத்தி உள்ளோம். ஆனால் அங்கு எந்த எதிர்ப்பு இல்லை. கோவை-பொள்ளாச்சி வழித்தடத்தில் ரெயில்களை இயக்குவதற்கு தான் பாலக்காடு கோட்டம் அனுமதி கொடுப்பதில்லை. ஆனால் இனிப்பு கொடுப்பதற்கு அனுமதி இல்லை என்பது வேடிக்கையாக உள்ளது என்று ரெயில்வே ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்