32 ஆயிரத்து 193 பேர் தேர்வு எழுத ஏற்பாடு

Update: 2023-04-05 17:02 GMT



எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 32 ஆயிரத்து 193 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு

திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் 15 ஆயிரத்து 392 மாணவர்கள், 15 ஆயிரத்து 280 மாணவிகள் என 30 ஆயிரத்து 672 பேரும், தனித்தேர்வர்கள் 1,521 பேரும் என மொத்தம் 32 ஆயிரத்து 193 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

மாவட்டத்தில் 113 மையங்களில் தேர்வுகள் நடத்த தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. 120 பறக்கும் படை அமைக்கப்பட்டு தேர்வு மையங்களை கண்காணிக்க உள்ளனர். இதுதவிர 113 மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு மையங்கள் தயார்

வினாத்தாள்கள் மாவட்டத்தில் 6 மையங்களில் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தேர்வுமையங்களில் வகுப்பறைகளில் மாணவ-மாணவிகளின் இருக்கைகளில் நுழைவுச்சீட்டு எண் எழுதும் பணி மற்றும் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தேர்வு எழுதும் மாணவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக அரசு பஸ் வசதி முறையாக இயக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு வரும் மாணவ-மாணவிகள் எளிதில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பறைகளை அறிவதற்கு வசதியாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை தயார்படுத்தும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்