தூத்துக்குடியில் பயங்கரம்:வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

தூத்துக்குடியில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை விரைந்து கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-19 18:45 GMT

பிரியாணி கடைக்காரர்

தூத்துக்குடி அண்ணாநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ். இவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 39). இவர்களது மகள் சத்யா (20), மகன் கணேசன் (18).

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுப்புலட்சுமி, கணவரை பிரிந்து மகளுடன் கே.டி.சி நகரில் உள்ள உறவினர் சுடலைமணி என்பவருடன் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சத்யாவுக்கு, சுப்புலட்சுமி திருமணம் செய்து வைத்தார். இதுகுறித்து அவர் ஆவுடையப்பனுக்கோ, மகன் கணேசனுக்கோ தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

அரிவாள் வெட்டு

நேற்று முன்தினம் இரவு கணேசன் டி.எம்.பி. காலனியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுடலைமணிக்கும், கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சுடலைமணி அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து கணேசன், தனது நண்பர்கள் சென்ற பிறகு தனியாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

அப்போது சுடலைமணி மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கணேசன் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் கீழே விழுந்த கணேசனை, சுடலைமணி தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

பரிதாப சாவு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், கங்கைநாத பாண்டியன், சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசனை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சுடலைமணியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

சாலை மறியல்

இதற்கிடையே, நேற்று காலையில் கணேசனின் உறவினர்கள் மில்லர்புரம் பகுதியில் நடுரோட்டில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் மில்லர்புரம் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

இந்த நிலையில் கொலையாளியை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கொலை செய்யப்பட்ட கணேசனின் தந்தை ஆவுடையப்பன் தலைமையில் அவரது உறவினர்கள் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் தென்பாகம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் மறியலை கைவிடவில்லை. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

தொடர்ந்து கணேசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல் தூத்துக்குடி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த பயங்கர கொலையை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்