பட்டப்பகலில் பயங்கரம்: மோட்டார் சைக்கிளை காரால் இடித்து தள்ளி நடுரோட்டில் வாலிபர் வெட்டிக்கொலை
மோட்டார் சைக்கிளை காரால் இடித்து கீழே தள்ளி, நடுரோட்டில் வாலிபரை வெட்டிக்கொன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை,
மதுரை செல்லூர் அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் சரவணக்குமார் (வயது 33). டிரைவரான இவர் தற்போது கோவையில் கண்ணாடி கடையில் வேலை பார்த்து வந்தார். விடுமுறை எடுத்து விட்டு நேற்று முன்தினம் அவர் மதுரை வந்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் அவர் தத்தனேரி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில், வைகை வடகரை ரோட்டில் சென்றார்.
அப்போது பின்னால் காரில் வந்த 3 பேர் கும்பல் அவரின் மோட்டார் சைக்கிளை இடித்து கீழே தள்ளியது. அதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். உடனே காரில் இருந்து இறங்கிய கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.
காரணம் என்ன?
இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சரவணக்குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து கடந்த 7 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.
இதற்கிடையில் குடும்பத்தகராறில் அவரது மனைவி பிரிந்து குழந்தையுடன் சென்று விட்டார். பின்னர் அவர் பரத் என்பவரை மறுதிருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையில் சரவணக்குமார் தனது குழந்தையை கேட்டு தொடர்ந்து மனைவிக்கும், அவரது 2-வது கணவருக்கும் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை வந்த அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே சரவணக்குமார் கொலையில் அவரது மனைவியின் 2-வது கணவர் பரத் மற்றும் அவரது மைத்துனர் வல்லரசு ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.