பழைய இரும்பு கடையில் பயங்கர தீ

பழனியில், பழைய இரும்பு கடையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-04-13 14:41 GMT

பழைய இரும்பு கடை

திண்டுக்கல் மாவட்டம் பழனி திருநகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவர், அடிவாரம் கொடைக்கானல் சாலை பிரிவு பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அங்கு பழைய இரும்பு, பிளாஸ்டிக், பீங்கான் உள்ளிட்ட பொருட்களை போட்டு வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சரவணன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் கடையில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

சிறிது நேரத்தில் தீ மள, மளவென கடை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

பொருட்கள் எரிந்து நாசம்

அதன்பேரில் நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து, கடையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி அடிவாரம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

----- 

Tags:    

மேலும் செய்திகள்