மாட்டு கொட்டகையில் பயங்கர தீ; கன்றுக்குட்டி, ஆடுகள் பலி

பழனி அருகே மாட்டு கொட்டகையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கன்றுக்குட்டி, ஆடுகள் பலியாகின.

Update: 2023-09-09 16:47 GMT

பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி அருகே உள்ள குப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 40). விவசாயி. இவர் அதே பகுதியில் கொட்டகை அமைத்து ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். அதன் அருகில் வைக்கோல் படப்பும் வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று மாலை மயில்சாமி தனது கொட்டகையில் மாடு, ஆடுகளை கட்டியிருந்தார். அப்போது திடீரென்று அவரது மாட்டு கொட்டகை மற்றும் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்தது. இதை கண்டதும் மயில்சாமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் அவர் உடனடியாக பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாட்டு கொட்டகை மற்றும் வைக்கோல் படப்பு மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் தீயில் கருகி ஒரு கன்றுக்குட்டி, 2 ஆடுகள், ஒரு நாய் ஆகியவை பரிதாபமாக இறந்தன. மாட்டு கொட்டகை அருகே உள்ள மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகள் உரசியதில் ஏற்பட்ட தீப்பொறி வைக்கோல் போர் மற்றும் கொட்டகை மீது விழுந்து தீப்பிடித்ததாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்