சித்தன்னவாசல் மலை பகுதியில் பயங்கர தீ

அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் மலை பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதனை தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் போராடி அணைத்தனர்.

Update: 2023-04-24 19:01 GMT

சித்தன்னவாசல் மலையில் தீ

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் மலையில் சுமார் 8-ம் நூற்றாண்டை சேர்ந்த குகை ஓவியம், சமணர் படுகைகள் உள்ளன. மேலும், சமணர் சிற்பங்கள், முதுமக்கள் தாழிகள் உள்ளன. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த சுற்றுலா தலத்தை மத்திய தொல்லியல் துறை கண்காணித்து வருகிறது.

இந்த மலையில் அடர்ந்த புதர் செடிகள், மரங்கள், கொடிகள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றின் இடையே உள்ள பாதை மூலம் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த மலையில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வெயிலுக்கு செடி, கொடிகள் கருகி இருந்ததால் மளமளவென மலையின் பல்வேறு இடங்களில் தீ பரவியது.

போராடி அணைத்தனர்

இதையறிந்த அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், இலுப்பூர் மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். மேலும் அவர்களுக்கு உதவியாக மேட்டுப்பாளையம் நிலை பணியாளர்கள், அன்னவாசல் போலீசார், பொதுமக்கள் ஆகியோரும் தண்ணீரை ஊற்றியும், மரக்கிளைகளை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் தீ கட்டுக்குள் அடங்காமல் ஆங்காங்கே பரவியது. மலையின் மீது ஏறி தீயணைப்பு பணியில் ஈடுபட முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தடுமாறினர். இதையடுத்து தண்ணீரை மலை மீது கொண்டு சென்று தீயை போராடி அணைத்தனர். இதனால் சமணர் படுகைகள், குகை ஓவியம் அமைந்துள்ள பகுதிக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. உச்சி மலை மீது தீப்பிடித்ததால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வெளிச்சமாக காணப்பட்டதோடு, புகை மண்டலமாகவும் காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் விசாரணை

இதனிடையே தீப்பற்றி எரிந்துகொண்டு இருந்தபோது மலைப்பாம்பு ஒன்று குறுக்கே வந்ததால் அப்பகுதியில் தீயணைப்பு பணியில் இருந்ந பொதுமக்கள் தலைதெறிக்க ஓடினர். பின்னர் மலைப்பாம்பு அப்பகுதியில் உள்ள மரங்களுக்கு இடையில் சென்று மறைந்தது. சித்தன்னவாசல் மலையில் சமூக விரோதிகள் சிலரால் தீ வைக்கப்பட்டதா? அல்லது கடும் வெயிலால் மலை பகுதியில் தீப்பிடித்தாத என்பது குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்