வால்பாறை ஓட்டலில் பயங்கர தீ விபத்து

வால்பாறையில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

Update: 2023-05-21 20:45 GMT

வால்பாறை

வால்பாறையில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

தீ விபத்து

வால்பாறையில் வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள குமரன் சாலையில் ஓட்டல் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஓட்டல் உரிமையாளர் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றார். ஊழியர் கபீர் என்பவர் ஓட்டலில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ ஓட்டல் முழுவதும் பரவி மளமளவென எரியத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த கபீர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்த கபீரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் லேசான தீக்காயத்துடன் கபீர் மீட்கப்பட்டார்.

ரூ.1 லட்சம் பொருட்கள் நாசம்

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அறிந்த வால்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்ததால், அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டலில் இருந்த அடுப்புகளை சரியாக அணைக்காததால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்