கருவாடு குடோனில் பயங்கர தீ விபத்து; ரூ.2 கோடி பொருட்கள் சேதம்
கோவில்பட்டி அருகே கருவாடு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே கருவாடு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
தீப்பிடித்து எரிந்தது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்தவர் அந்தோணி அரசாங்க மணி (வயது 49). இவர் சிவந்திபட்டி- தீத்தாம்பட்டி சாலையில் கருவாடு ஆலை மற்றும் குடோன் வைத்துள்ளார். இங்கிருந்து கருவாட்டினை சுத்தப்படுத்தி கோழி தீவனத்திற்கு அனுப்பி வைக்கும் தொழில் செய்து வருகிறார்.
நேற்று அதிகாலை கருவாடு குடோன் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடோன் காவலாளி ராமச்சந்திரன் (72), இதுபற்றி உடனடியாக ஆலை மேலாளர் பிரான்ஸிஸ்க்கு தகவல் கொடுத்தார். அவர் கொப்பம்பட்டி போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
தீயை அணைத்தனர்
இதையடுத்து கோவில்பட்டியில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள், கழுகுமலை, தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய வாகனங்கள் என 5 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். மாவட்ட தீயணைப்பு கூடுதல் அதிகாரி முத்துப்பாண்டியன் மற்றும் அதிகாரிகள் சுந்தர்ராஜ், மலையாண்டி, சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
மேலும், ஆலை நிர்வாகம் சார்பில் டேங்கர் டிராக்டர்களில் தண்ணீர் சப்ளை செய்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் குடோன் மற்றும் ஆலை முழுவதும் தீப்பற்றி எரிந்து கட்டிட கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் இடிந்தது. தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். மாலை வரை தீயணைப்பு பணி நடந்தது.
ரூ.2 கோடி பொருட்கள் சேதம்
குடோனில் இருந்த கருவாடு மூட்டைகள், மினி லாரி, ஆலையில் உள்ள எந்திரங்கள் மற்றும் கட்டிட கூரை, சுவர்கள் சேதமடைந்தன. கட்டிட சுவர்களை பொக்லைன் எந்திரங்கள் மூலமாக அகற்றப்பட்டன.
தீ விபத்தில் கருவாடு மூட்டைகள், எந்திரங்கள் மற்றும் கட்டிடங்கள் என சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து இருப்பதாக நிர்வாக தரப்பில் தெரிவித்தனர். காலையில் ஊழியர்கள் யாரும் வேலைக்கு வராததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இந்த தீ விபத்து குறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.