விஷப்பூச்சிகளின் கூடாரமான குடியிருப்புகள்
கூடலூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி உள்ளது. அங்கு புதர்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என குடியிருப்புவாசிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி உள்ளது. அங்கு புதர்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என குடியிருப்புவாசிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
குடியிருப்பு வளாகம்
கூடலூர் மார்தோமா நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு அரசு ஊழியர்கள், குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக வளாகம் முழுவதும் முட்புதர்கள் படர்ந்து காணப்படுகிறது.
இந்தநிலையில் மழை காலம் முடிவடைந்து உறைபனி தொடங்கி விட்டது. இருப்பினும் குடியிருப்பு வளாகம் முழுவதும் புதர்கள் மண்டி காணப்படுகிறது. தொடர்ந்து பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்து உள்ளனர். இதனால் புதர்களை வெட்டி அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
விஷ பூச்சிகள் நடமாட்டம்
ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதேபோல் குடியிருப்புகளில் இருந்து செல்லக்கூடிய கழிவுநீர் வாய்க்கால்களும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர் வாய்க்கால்களை முறையாக பராமரிக்க வேண்டும். தொடர்ந்து குடியிருப்பு வளாகம் முழுவதும் படர்ந்து காணப்படும் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் கூறும்போது, புதர்கள் மண்டி காணப்படுவதால் இரவில் வனவிலங்குகள் நடமாட்டமும் உள்ளது. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் கூடாரமாக காணப்படுகிறது என்றனர்.