தி.மு.க.-அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் போட்டி கோஷமிட்டதால் பரபரப்பு

கோவையில் மேம்பால திறப்பு விழாவில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் திரண்டு போட்டிபோட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-11 17:36 GMT

கோவை, 

கோவையில் மேம்பால திறப்பு விழாவில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் திரண்டு போட்டிபோட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேம்பால திறப்பு விழா

கோவை - திருச்சிரோட்டில் கட்டப்பட்ட மேம்பால திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருச்சிரோட்டில் இந்த பாலத்தின் போக்குவரத்து தொடக்க விழா அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

3 கட்சியினர் திரண்டனர்

திருச்சிரோடு மேம்பாலம் அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.230 கோடியில் கட்டுமான பணி தொடங்கியது. இந்த பாலம் கோவை தெற்கு தொகுதியில் உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியுடன் இந்த பாலம் கட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து பால திறப்பு விழாவுக்கு தி.மு.க.வினர், அ.தி.மு.க.வினர், பாரதீய ஜனதாவினர் கட்சி கொடிகளுடன் திரண்டு வந்தனர். 3 கட்சிகளின் பிரமுகர்களும் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். புதிய மேம்பாலத்துக்கு 3 கட்சியினரும் உரிமை கொண்டாடினார்கள். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் தங்களது கட்சி கொடிகளுடன் திரண்டு வந்திருந்தனர்.

போட்டி போட்டு கோஷம்

தி.மு.க., அ.தி.மு.க. பாரதீய ஜனதா கட்சியினர் ஒரே இடத்தில் குவிந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சி கொடிகளுடன் கோஷம் எழுப்பினார்கள். பதிலுக்கு மற்ற கட்சியினரும் தங்களது கட்சி கொடிகளுடன் கோஷம் எழுப்பினார்கள். கோஷம், எதிர்கோஷம் இவற்றால் பரபரப்பான நிலை ஏற்பட்டது. இருந்தாலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து மேம்பால போக்குவரத்தை தொடங்கி வைத்தார். அப்போது ஒவ்வொரு கட்சியனரும் தங்களது வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். மேம்பாலத்தில் வாகனங்களில் கட்சி கொடிகளுடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

புதிய மேம்பாலத்துக்கு 3 கட்சியினர் உரிமை கொண்டாடி கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இனிப்பு வழங்கினர்

இதேபோல் கவுண்டம்பாளையம் மேம்பாலம் 2019-ம் ஆண்டு ரூ 60 கோடி செலவில் அ.தி.முக ஆட்சியில் கட்டுமான பணி தொடங்கியது இதனால் இந்த மேம்பால திறப்பு விழாவிலும் அ.தி.முக எம்.எல்.ஏக்கள் கட்சி பிரமுகர்கள், தி.மு.க.வினர் அணி திரண்டு வந்தனர்.இதனால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. புதிய பாலத்தில்வாகனங்களில் சென்றவர்களுக்கு அ.தி.மு.கவினரும், தி.மு.க.வினரும் இனிப்பு வழங்கினார்கள். இரு கட்சியினரிடையே மோதல்ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்