ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து புனித நீராடினர்.
ராமேசுவரம்,
ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து புனித நீராடினர்.
ஆடி அமாவாசை
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றாகவும், முக்கிய பரிகார தலமாகவும் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் விளங்குகிறது.
இந்த கோவிலுக்கு ஆடி, தை அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் வந்து குவிவார்கள். ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, தங்கள் முன்னோர் நினைவாக திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகி்றது. இதில் முதலாவது அமாவாசை ஆடிப்பிறப்பான நேற்று வந்தது.
இது கூடுதல் சிறப்பாகும். இம்மாதத்திற்கான 2-வது அமாவாசை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந்தேதி வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று ஆடி அமாவாசை என்பதால், அதிகாலை 3 மணி முதல் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து நீராடினர்.
தர்ப்பண பூஜை
பின்னர் கடற்கரையில் அமர்ந்து புரோகிதர்கள் மூலம், தங்கள் முன்னோரை வேண்டி திதி, தர்ப்பண பூஜை செய்தும், அரிசி மாவால் செய்த பிண்டம் மற்றும் எள்ளை கடலில் கரைத்தும் வழிபாடு செய்தனர். அதன்பின்னர் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினர்.பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால், கோவிலின் வடக்கு கோபுர வாசல் பகுதியில் இருந்து ரதவீதி சாலை மற்றும் கிழக்கு கோபுர வாசல் ரதவீதி சாலை வரையிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்கள் கூட்ட நெருக்கடி இல்லாமல் சென்று தீர்த்தமாட வசதியாக ரதவீதி சாலை மற்றும் கோவிலின் பிரகாரம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு இருந்தன.
சிறப்பு பஸ்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்க ராமேசுவரம் நகருக்குள் நேற்று அரசு பஸ்கள், வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. பஸ் நிலையத்திற்கு முன்பாகவே வெளியூர்களில் இருந்து வந்த அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பக்தர்கள் நடந்தே கோவில் வரை வந்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவை, திருப்பூர், ஈரோடு, பழனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் 100 சிறப்பு பஸ்கள் நேற்று ராமேசுவரத்திற்கு இயக்கப்பட்டன.
தீவிர கண்காணிப்பு
ராமேசுவரத்தில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை நேரடி கண்காணிப்பில் கூடுதல் சூப்பிரண்டு, 7 துணை சூப்பிரண்டுகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோவிலின் உள்ளே இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் மற்றும் ஏராளமான கோவில் பணியாளர்கள், பக்தர்களை ஒழுங்குபடுத்தினர். ராமேசுவரத்திற்கு வந்த ஏராளமானோர் கோவிலில் தரிசித்துவிட்டு, தனுஷ்கோடிக்கும் சென்று சுற்றுலா இடங்களை பார்வையிட்டனர்.
தேவிபட்டினம்-சேதுக்கரை
ஆடி அமாவாசையை முன்னிட்டு தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷான நவக்கிரக கோவில் கடலிலும் நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். அதுபோல் திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் புனித நீராடிய பக்தர்கள், கடற்கரையில் அமர்ந்து தர்ப்பண பூஜை செய்து வழிபட்டனர்.