தென்முகம் வெள்ளோடு ராசா சாமி- நல்லமங்கையம்மன் கோவிலில் முதல் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
தென்முகம் வெள்ளோடு ராசா சாமி- நல்லமங்கையம்மன் கோவிலில் முதல் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஈரோடு அருகே தென்முகம் வெள்ளோட்டில் பிரசித்தி பெற்ற ராசா சாமி- நல்லமங்கையம்மன் கோவில் உள்ளது. இந்தநிலையில் தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குலமக்கள் நற்பணி மன்றம் சார்பில் ராசா சாமி- நல்லமங்கையம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டு உள்ளது. இதன் முதல் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலையில் மூலவர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கலச பூஜை நடந்தது. இதையடுத்து புதிய தேரின் கோபுரத்தில் கலசம் நிறுவப்பட்டது. உற்சவ சாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நல்லமங்கையம்மன் உடனமர் ராசா சாமி புதிய தேரில் எழுந்தருளினார். அதன்பிறகு தேரோட்டம் தொடங்கியது. தேர் கோவிலின் பிரகாரத்தை சுற்றி நிலை வந்தடைந்தது. விழாவில் கோவை ரூட்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் கே.ராமசாமி, கேரளா மாநில கவுமா பால்பண்ணை உரிமையாளர் மருதாச்சலம், திருப்பூரை சேர்ந்த சாமியப்பன், தங்கவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், கிட்டுசாமி மற்றும் தென்முகம் வெள்ளோடு மூன்று கரை சாத்தந்தை குலமக்கள் நலச்சங்க நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் உள்பட ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், கரூர், நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை மன்றத்தின் தலைவர் சி.முத்துசாமி, செயலாளர் என்.டி.கண்ணுசாமி, பொருளாளர் கே.டி.பொன்னுசாமி, துணைத்தலைவர் எல்.நடராஜன், துணைச்செயலாளர்கள் கே.திருமூர்த்தி, எஸ்.தர்மலிங்கம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். மாதந்தோறும் பவுர்ணமி அன்று இரவு 7 மணிக்கு தேர் கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் என்றும், மற்ற நாட்களில் பக்தர்கள் விரும்பினால் உரிய கட்டணம் செலுத்தி இரவு 7 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுக்கலாம் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.