தென்காசி யூனியன் கூட்டம்
தென்காசி யூனியன் கூட்டம் அதன் தலைவர் எம்.ஷேக் அப்துல்லா தலைமையில் நடந்தது.
தென்காசி பஞ்சாயத்து யூனியன் கூட்டம் நேற்று யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது கூட்டத்துக்கு யூனியன் தலைவர் எம்.ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், குழந்தை மணி (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது கவுன்சிலர் வினோதி பேசும்போது, பிரானூர் பஞ்சாயத்தில் அரசு திட்டப்பணிகளில் பஞ்சாயத்து தலைவியின் கணவர் இடையூறு செய்வதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கவுன்சிலர் அழகுசுந்தரமும், எல்லா பஞ்சாயத்துகளிலும் தலைவர்கள் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதாக கூறினார். அதற்கு யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் ஆகியோர் பதிலளிக்கையில், இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டத்தில் அவர்களுக்கு அறிவிப்பு தெரிவிக்கப்படும் என்றார். கூட்டத்தில் மொத்தம் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.