தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் நடந்தது.

Update: 2022-09-03 10:51 GMT

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் அதன் தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், செயலாளர் ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து கவுன்வுர்சிலர்களும் கலந்து கொண்டனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவி பொறியாளர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 85 லட்சத்து 83 ஆயிரத்து 14-க்கும், மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 56 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் திட்டப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, கவுன்சிலர் சுப்பிரமணியன் அனைவருக்கும் சமமாக நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து தலைவியிடம் வாக்குவாதம் செய்தார். அதற்கு அவர், மக்கள் நலத்திட்டங்கள் அனைத்து வார்டுகளுக்கும் முறையாக வழங்கப்படும். அவ்வாறுதான் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன என்றார். அப்போது கவுன்சிலர்கள் கனிமொழி, மதிமாரிமுத்து ஆகியோர் தொடர்ச்சியாக இதுபோன்று முறையில்லாமல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது என்று கூறி அவர்கள் உள்பட 5 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். கவுன்சிலர் சாக்ரடீஸ் அரசின் திட்டப்பணிகள் தேவைப்படும் இடங்கள் மற்றும் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டதை தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்