மீன் பிடிப்பதற்காக ஏரி நீரை வீணாக வெளியேற்றும் குத்தகைதாரர்கள்

மீன்பிடிப்பதற்காக ஏரி நீரை வீணாக குத்தகைதாரர்கள் வெளியேற்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-10-01 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

சங்கராபுரம் மற்றும் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளது. இந்த நீர்நிலைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு குடிநீரும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நீரின் அத்தியாவசியத்தை அறிந்து அதனை வீணாக்காமல் நீர் நிலைகளில் தேக்கி வைக்கும் பணியில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஏரி, குளங்கள் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வாரி சீரமைத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் ஏரி நீரை தேவையின்றி வீணாக வெளியேற்றி விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் சூழ்நிலையை சிலர் உருவாக்கி வருகின்றனர். இது குறித்த விவரம் வருமாறு:-

சங்கராபுரம் அருகே கடுவனூரில் 80 ஹெக்டேர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் நிலத்தடி நீர் மட்டம் மூலம் பொதுமக்களின் குடிநீர் தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சங்கராபுரம் பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

வறண்ட ஏரி

இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு வென உயர தொடங்கியது. மேலும் பருவமழை விரைவில் தொடங்க இருப்பதால், நடப்பாண்டு விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயிகள் கருதியதால் அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஏனென்றால் ஏரியை குத்தகைக்கு எடுத்து மீன்வளர்த்து வருபவர்கள், ஏரியில் அதிக அளவில் தண்ணீர் இருந்தால், மீன்களை பிடித்து விற்பனை செய்ய முடியாது. இதன் மூலம் தங்களுக்கு வருமான இழப்பு ஏற்படும் என கருதினர்.

இதையடுத்து அவர்கள் ஏரிக்கு வரும் மழை நீரை அப்படியே வெளியேற்றி உள்ளனர். இதனால் தற்போது ஏரி தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் குடிநீர் தட்டுப்பாடும் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குத்தகைதாரர்களின் இந்த தவறான செயலை, பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஏரியை நம்பி சுற்றுவட்டார பகுதியில் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவ்வபோது பரவலாக பெய்து வரும் மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து வந்தது. ஆனால் குத்தகை தாரர்கள், தங்களது சுயலாபத்துக்காக ஏரிக்கு வரும் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். மழை காரணமாக கடுவனூரை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் தற்போது நிரம்பும் நிலையில் உள்ளது.

ஆனால் கடுவனூர் ஏரி மட்டும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. பருவமழை எதிர்பாராதவிதமாக பொய்த்து போனால், விவசாயத்துக்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும் ஏரியை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

நடவடிக்கை

இதனால் ஏரியின் பரப்பளவு குறைந்து வருவதால், ஏரியில் மழைநீரை அதிக அளவில் தேக்கி வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க மீன் வளர்க்கும் குத்தகைதாரர்கள் ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதை தடுக்க வேண்டும். மேலும் ஏரியை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் தான் எங்களால் அதிக நிலப்பரப்பில் விவசாயம் செய்ய முடியும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்