தற்காலிக ஆசிரியர் பணியிடம்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவால் தென் மாவட்டங்களில் விண்ணப்பம் பெறுவது நிறுத்தம்
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தென்மாவட்டங்களில் மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு வரும்வரை விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தென்மாவட்டங்களில் மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு வரும்வரை விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தற்காலிக ஆசிரியர்
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 4989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,188 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு வழியாக தற்காலிக அடிப்படையில் நியமிக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்காக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கடந்த 1-ந் தேதிக்குள் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் மாதாந்திர மதிப்பூதியமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அரசின் அறிவிப்பை தொடர்ந்து, மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்துக்கு வேலையில்லாத பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் குவிந்தனர். அவர்கள் விண்ணப்பங்கள் கிடைக்குமா, எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் கேள்வியெழுப்பினர். இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் எந்தெந்த பள்ளிகளில், எந்ததெந்த பாடங்களில் எத்தனை காலி இடங்கள் உள்ளன என்ற பட்டியல் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டது.
ஐகோர்ட்டில் வழக்கு
ஆனால், இந்த அறிவிப்பு திடீரென்று திரும்ப பெறப்பட்டது. இதற்கிடையே, மதுரை ஐகோர்ட்டு கிளையில் இந்த பணி நியமனத்துக்கு தடைவிதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கோர்ட்டு மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை தற்காலிக ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையின் எல்லைக்குள் வரும் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்ப கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையிலான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து, மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்துக்கு நேற்று நூற்றுக்கணக்கான ஆசிரிய பட்டதாரிகள் குவிந்தனர். அவர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கந்தசாமி விளக்கமளித்து, தற்போதைக்கு மதுரை மாவட்டத்தில் விண்ணப்பங்கள் ஐகோர்ட்டு உத்தரவுக்கு பின்னரே பெறப்படும். அப்போது, விண்ணப்பங்களை மேலூர், திருமங்கலம், மதுரை, உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகே, விண்ணப்பதாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.