விதிமீறல் கட்டிடங்களை அகற்றும் பணி தற்காலிக நிறுத்தம்
பொள்ளாச்சியில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றுவதற்கு பொதுமக்கள், கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த கட்டிடங்களை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றுவதற்கு பொதுமக்கள், கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த கட்டிடங்களை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
விதிமுறையை மீறிய கட்டிடங்கள்
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்துக்கு கடந்த வாரம் வந்த நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிமுறையை மீறிய கட்டிடங்கள் குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து அகற்ற உத்தரவிட்டார். இதை தொடர்ந்து திருப்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட நகராட்சிகளில் இருந்து நகரமைப்பு அலுவலர், ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் பொள்ளாச்சிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் விதிமுறையை மீறி கட்டப்பட்டதாக 47 கட்டிடங்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. மேலும் நோட்டீசு வழங்கிய 48 மணி நேரத்துக்குள் இடித்து அகற்றப்படும் என்று கட்டிட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று நோட்டீசு வழங்கப்பட்ட அனுமதி இல்லாத கட்டிடங்களை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருப்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட நகராட்சிகளில் இருந்து பொக்லைன் எந்திரங்கள் நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. மேலும் மற்ற நகராட்சிகளில் இருந்து நகரமைப்பு அதிகாரிகளும் வந்திருந்தனர்.
பணி நிறுத்தம்
இதுகுறித்து தகவல் அறிந்த தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். மேலும் ஒரு சில தி.மு.க. கவுன்சிலர்கள் கட்டிடங்களை இடிக்காமல் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். அ.தி.மு.க. கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா கட்டிடங்களை இடித்தால் பொக்லைன் எந்திரங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
கட்டிடங்களை இடிக்க அனுமதிக்க மாட்டோம். நியூஸ்கீம் ரோடு உள்பட முக்கிய சாலைகளில் விதிமுறையை மீறிய கட்டிடங்கள் உள்ளன. அந்த கட்டிடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கவுன்சிலர்கள், அதிகாரிகள் கூட்டம் காரணமாக நகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. இதற்கிடையில் போலீசார் தரப்பில் அனுமதி மறுப்பால் கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து அகற்றுவது குறித்து ஏற்கனவே கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி தொடங்க இருந்தது. இதற்கிடையில் போலீசார் சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட கூடும் என்று கூறி அனுமதி மறுத்து விட்டனர். இதனால் கட்டிடங்கள் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. விதிமுறையை மீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொள்ளாச்சி நகரில் நியூஸ்கீம் ரோடு, கோவை ரோடு, பல்லடம் ரோடு என முக்கிய சாலைகளில் உரிய அனுமதி பெறாத கட்டிடங்கள் உள்ளன. எனவே குடியிருப்புகள் மட்டுமல்லாது வணிக நிறுவனங்களில் உரிய அனுமதி பெறப்பட்டு உள்ளதா என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.