சென்னிமலை ரோடு சாஸ்திரிநகர் மேம்பாலம் பகுதியில் தற்காலிகமாக ரவுண்டானா மாற்றி அமைப்பு- போக்குவரத்து குழப்பத்தை தீர்க்க நடவடிக்கை

ஈரோடு சென்னிமலை ரோடு சாஸ்திரிநகர் மேம்பாலம் பகுதியில் தற்காலிகமாக ரவுண்டானா மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-10-05 23:16 GMT

ஈரோடு சென்னிமலை ரோடு சாஸ்திரிநகர் மேம்பாலம் பகுதியில் தற்காலிகமாக ரவுண்டானா மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

நெரிசலான ரோடு

ஈரோடு மாநகரில் மிகவும் நெரிசலான ரோடுகளில் ஒன்றாக சென்னிமலை ரோடு உள்ளது. இங்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையின் எதிரில் சாஸ்திரிநகர் பகுதிக்கு செல்லும் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு இருக்கிறது.

பணிமனையின் எதிரில் சாலை குறுகலாக இருப்பதாலும், மேம்பாலத்துக்கு செல்ல வேண்டிய வாகனங்களுக்கு உரிய வசதி இல்லாததாலும் இங்கு எப்போதும் போக்குவரத்து குளறுபடி ஏற்படுவது வழக்கம். அடிக்கடி விபத்துகளும் நடந்து வந்தன. இதை தவிர்க்க இங்கு ஒரு ரவுண்டானா அமைக்கப்பட்டது. ஆனாலும் போக்குவரத்து குழப்பமும், சிக்கலும் தொடர்ந்து வந்தது.

சாலை விரிவாக்கம்

எனவே சாஸ்திரிநகர் மேம்பாலத்தையொட்டி ஈரோடு சாலையில் இருந்து ஒரு இணைப்பு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து இந்த பகுதியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.1 கோடியே 80 லட்சம் செலவில் சாலை விரிவாக்கம் மற்றும் புதிய ரவுண்டானா அமைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. மேம்பாலத்தின் ஒரு பகுதி சுவர் இடிக்கப்பட்டு அந்த பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதுபோல் சாலையில் 2 பக்கங்களும் விரிவாக்கம் செய்யப்பட்டன.

ரவுண்டானா

இந்த பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இங்கு தற்காலிகமாக ரவுண்டானா மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் சென்னிமலை ரோட்டுக்கு செல்லவும், மேம்பாலத்தில் ஏறி சாஸ்திரிநகர் செல்லவும் திட்டமிட்டு ரவுண்டானா அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதுபோல் சாஸ்திரி நகர் மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஈரோடு சாலையில் திரும்பவும் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. நேற்று ரவுண்டானா வழியாக வாகனங்கள் குழப்பம் இன்றி சென்றன. இதன் மூலம் இந்த பகுதியில் போக்குவரத்து குழப்பத்துக்கு தீர்வு காணப்படும் என்று நம்பப்படுகிறது.

கண்காணிக்க வேண்டும்

இதுகுறித்து டிரைவர் வேலுச்சாமி என்பவர் கூறியதாவது:-

சிறிய ரக வாகனங்கள் ரவுண்டானாவில் செல்ல எந்த சிக்கலும் இல்லை. ஆனால் ஈரோடு ரோட்டில் இருந்து வரும் லாரிகள், பஸ்கள் மேம்பாலத்தில் ஏற சற்று சிரமம் இருக்கும்.

அதுமட்டுமின்றி இரவு நேரத்தில் போக்குவரத்துக்கழக பணிமனைக்கு வரும் அனைத்து பஸ்களையும் இந்த சாலையில் நிறுத்தி வைத்து விடுவார்கள். அப்போதுதான் இங்கு சிக்கல் ஏற்படும். எனவே அதை அதிகாரிகள் கண்காணிக்கவும், இணைப்பு மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்