தபால் மூலம் வீடுதேடி வரும் கோவில் பிரசாதம்
திருப்பதி கோவில் பிரசாதத்தை தபால் மூலம் பெறக்கூடிய வசதி இருப்பதுபோல், புகழ்பெற்ற கோவில் பிரசாதங்களை தபாலில் பெற்றுக்கொள்ள அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது.
கோவில் பிரசாதங்கள்
தமிழ்நாட்டில் பழனி தண்டாயுதசுவாமி கோவிலில் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரும் இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம் வீடுகளில் இருந்தபடியே இஷ்டமான கோவிலில் இருந்து பிரசாதத்தை பெறமுடியும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில் மற்றும் கரூர் கல்யாண வெங்கடரமணசுவாமி கோவில் உள்பட 48 முதுநிலை கோவில் பிரசாதங்களை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம் எந்த அளவில் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறித்து அரியலூர் மாவட்ட பக்தர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
இறை நம்பிக்கை
அரியலூரை சேர்ந்த அசோக்:- கோவில்களுக்கு நாம் நேரடியாக சென்று இறைவனை வழிபட்டு, தீபாராதனை பார்த்து பெறப்படும் விபூதி, குங்குமத்தை நாம் நெற்றியில் பூசிக்கொள்ளும் போது பெரும் திருப்தி கிடைக்கும். தற்போது தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் முக்கிய கோவில் பிரசாதங்கள் தபால் மூலம் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இவை ஆன்மிக முறைப்படி பூஜிக்கப்பட்டு பக்தர்களின் இறை நம்பிக்கை பாதிக்கப்படாத வகையில் வழங்க வேண்டும். விசேஷ தினங்களில் உரிய காலத்தில் பிரசாதம் கிடைக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இந்த திட்டம் சிறப்பாக இருக்கும்.
கோவில் தலவரலாறு
அரியலூரை சேர்ந்த கிரிஜா:- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு மணியார்டர் அனுப்பினால் பிரசாதம் அனுப்பும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோவில் பிரசாதங்களை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த கோவிலில் இருந்து பிரசாதம் வருகிறதோ அந்த கோவிலின் தல வரலாறு மற்றும் அந்த கோவில் பற்றிய ஸ்லோகங்கள் அனுப்பி வைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும். பக்தர்கள் அந்த புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ள முடியும்.
வரவேற்க தகுந்த திட்டம்
விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த துரைராஜ்:- கோவில் பிரசாதம் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் திட்டம் உண்மையில் வரவேற்க தகுந்த திட்டமாகும். கோவிலுக்கு நேரிடையாக சென்று பிரசாதம் வாங்குவதற்கு பதிலாக ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தி வீட்டில் இருந்தபடியே கோவில் பிரசாதத்தை பெற முடியும். பிரசாதங்களுக்கு அதிக விலை வைக்காமல் பொதுமக்கள் வாங்குகின்ற அளவிற்கு கணிசமான விலையில் வழங்க வேண்டும். மேலும் பஞ்சாமிர்தம் போன்றவை ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரைத்தான் நன்றாக இருக்கும். எனவே பக்தர்களின் வீடுகளுக்கு விரைந்து கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தபால்துறை
தபால் துறை அதிகாரிகள்:- பக்தர்களின் வீடுகளுக்கு கோவில் பிரசாதம் வழங்கும் திட்டம் நல்ல முன்னெடுப்பாகும். இதன் மூலம் அறநிலையத்துறை மட்டும் அல்லாது தபால் துறைக்கு வருமானம் கிடைக்கும். பக்தர்களுக்கும் மனநிறைவு ஏற்படுகிறது. அதுவும் அனைத்து கிராம அளவில் தபால் அலுவலகங்கள் இருப்பதால் தமிழகத்தின் எந்த மூலைமுடுக்குகளிலும் இருப்பவர்களுக்கு தபால் துறையால் பிரசாதத்தை கொண்டு சேர்க்க முடியும்.
இதுகுறித்து தபால் துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளலாம். விரைவான சேவை வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை செய்து பக்தர்கள் நலன் கருதி முடிவு எடுக்கப்படும்.
அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி:- தமிழ்நாட்டில் உள்ள 48 முதுநிலை கோவில் பிரசாதங்களை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் துறை மூலம் அனுப்பி வைக்கும் திட்டத்திற்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. பிரசாதம் தேவைப்படும் பக்தர்கள் அந்தந்த கோவில் இணையதள முகவரிக்கு சென்று கோவில் முகவரியை பெற்றுக்கொண்டு, அதில் வீட்டு முகவரி மற்றும் ஆன்லைனில் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஓரிரு நாட்களில் பிரசாதம் பக்தர்களின் வீடு தேடி வரும். இதற்காக ஒவ்வொரு கோவிலிலும் தனியாக பணியாட்கள் நியமிக்கப்பட்டு திட்டம் திறம்பட செயல்படுத்தப்படுகிறது. கட்டணத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு கோவிலுக்கும் மாறுபடுகிறது.
குறிப்பாக மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் ரூ.80 அனுப்பினால் விபூதி, குங்குமம் பிரசாதம் வழங்கப்படுகிறது. திருவல்லிகேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் ரூ.80 கட்டணம் செலுத்தினால் பார்த்தசாரதி பெருமாள் சுவாமி படம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்படுகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.250 செலுத்தினால் பஞ்சாமிர்த டப்பா, விபூதி, குங்குமம், விபூதி, குங்குமம், சந்தனம் மற்றும் கோவில் பூஜை முறைகள், ஸ்தல வரலாறு, பூஜைகளுக்கான கட்டண விவரம் அடங்கிய புத்தகம் அனுப்பப்படுகிறது.
அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் பிரசாதம் தேவைப்படுபவர்கள் ஆன்லைன் மூலம் ரூ.160-ஐ கோவிலுக்கு ஆன்லைன் மூலம் செலுத்தினால் 150 கிராம் எடையுள்ள 10 தட்டு வடை, விபூதி, குங்குமம், ஆஞ்சநேயர் சாமியின் உருவப்படம் ஆகியவை பிரசாதமாக அனுப்பி வைக்கப்படும். பிரசாதங்களை உடனுக்குடன் அனுப்பினால் துறையின் நற்பெயர் பாதுகாக்கப்படும். திட்டம் நூறு சதவீதம் வெற்றி பெறுவதுடன், பணம் செலுத்த பிரசாதம் வாங்கும் பக்தர்களுக்கு மனநிறைவை தர வேண்டும். அதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அனைத்து இணை-கமிஷனர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மேலும் அதிக எண்ணிக்கையிலான கோவில்களில் பிரசாதம் அனுப்பும் திட்டம் விரிவுப்படுத்தப்படும். பக்தர்கள் தங்கள் திருமண நாள், பிறந்த நாள், பெற்றோர்கள் பிறந்த நாள், கணவன்-மனைவி- குழந்தைகள் பிறந்த நாட்களில் விரும்பும் கோவில்களின் (48 கோவில்கள்) பிரசாதங்களை தபாலில் பெற்று இறையருள் பெறலாம். இந்த திட்டம் மூலம் கோவிலுக்கு வருமானமும் வரும், பக்தர்களுக்கு மனதிருப்தியும் ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.