தபால் மூலம் வீடுதேடி வரும் கோவில் பிரசாதம்

தபால் மூலம் வீடுதேடி வரும் கோவில் பிரசாதம் திட்டம் குறித்து பக்தர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

Update: 2023-05-25 17:07 GMT

திருப்பதி கோவில் பிரசாதத்தை தபால் மூலம் பெறக்கூடிய வசதி இருப்பதுபோல், தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில் பிரசாதங்களை தபாலில் பெற்றுக்கொள்ள அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது. ஏற்கனவே சில கோவில்களில் நடைமுறையில் இருந்துவரும் இந்தத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது.

இதன்மூலம் வீடுகளில் இருந்தபடியே இஷ்டமான கோவிலில் இருந்து பிரசாதத்தை பெறமுடியும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தில் உள்ள 48 முதுநிலை கோவில் பிரசாதங்களை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பழனி முருகன் கோவில்

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், பழனி முருகன் கோவில் ஆகியவற்றில் இருந்து தபால் மூலம் பக்தர்களுக்கு பிரசாதம் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் பழனியில் உள்ள முருகப்பெருமானின் 3-ம் படை வீடான முருகன் கோவிலில் இருந்து தான் அதிக அளவில் தபால் மூலம் பக்தர்களின் வீடு தேடி பிரசாதம் செல்கிறது. பழனி என்றாலே நம் நினைவுக்கு வருவது பஞ்சாமிர்தம் தான். இந்த பஞ்சாமிர்தத்துடன் பக்தர்களின் மனதை கொள்ளை கொள்ளும் முருகப்பெருமானின் ராஜ அலங்கார புகைப்படம், 10 கிராம் விபூதி ஆகியவை அடங்கிய தொகுப்பு பக்தர்களுக்கு தபால் மூலம் நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே அனுப்பப்படுகிறது. இதற்காக ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

3,327 பேருக்கு பிரசாதம்

மேலும் பழனி முருகன் கோவிலின் இணையதளத்திலும் பிரசாதத்துக்காக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. கோவில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால் பஞ்சாமிர்தம் பிரசாதம் அடங்கிய தொகுப்பு தபால் மூலம் பக்தர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பழனி முருகன் கோவிலில் இந்த திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி தொடங்கப்பட்டது. அன்று இருந்து கடந்த மாதம் வரை 3 ஆயிரத்து 327 பேருக்கு பழனி முருகன் கோவிலில் இருந்து பிரசாத தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசாத தொகுப்பில் முக்கிய இடம் பிடிக்கும் பஞ்சாமிர்தம் தயாரிக்க சிறுமலை மலைவாழைப்பழம் மற்றும் பிற ஊர்களில் இருந்து கொண்டுவரப்படும் கற்பூரவள்ளி வாழைப்பழம் ஆகியவை தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. பழனி முருகன் கோவில் மின் இழுவை ரெயில் நிலையம் அருகே பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்காக தனி கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பிரத்யேக எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த கட்டிடத்தில் வாழைப்பழங்களை சேகரித்து வைப்பதற்கும் தனி அறை உள்ளது.

மனிதர்களின் கை படாமல் முழுக்க, முழுக்க எந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படுவதால் பழனி பஞ்சாமிர்தம் அதிக சுவை கொண்டதாக இருக்கிறது.

இந்த திட்டம் எந்த அளவில் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறித்து பக்தர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

விரைவாக கிடைக்க வேண்டும்

நத்தம் தாலுகா பெரிய அரவக்குறிச்சியை சேர்ந்த நாகராஜன்-லதா தம்பதி:- கோவில் பிரசாத தொகுப்பை பக்தர்களின் வீட்டுக்கே கொண்டு சேர்க்கும் திட்டம் வரவேற்கத்தக்கதாகும். ஏனென்றால் வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பலர் கோவிலுக்கு வந்து பிரசாதம் வாங்குவதற்கு பதிலாக ஆன்லைனில் பிரசாத தொகுப்புக்கான கட்டணத்தை செலுத்தி வீட்டில் இருந்தபடியே அவற்றை பெற முடிகிறது.

கோவிலில் இருந்து அனுப்பப்படும் பிரசாதத்தை பக்தர்கள் முழுமையாக நம்பி சாப்பிடுகின்றனர். எனவே அதில் எந்தவித குறைபாடும் ஏற்பட்டுவிடக்கூடாது. பஞ்சாமிர்தம் குறிப்பிட்ட நாட்கள் வரையே சாப்பிட முடியும். எனவே பார்சல் மூலம் அனுப்பப்படும் பிரசாத தொகுப்பு பக்தர்களுக்கு விரைவாக கிடைக்கும் வகையில் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சிறந்த சேவை

தீபிகா (கல்லூரி மாணவி, வாழைக்காய்பட்டி) :- கோவில்களில் விபூதி, குங்குமம், சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்றவை பிரசாதமாக வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்த பிரசாதம் தான் பிரசித்தி பெற்றது. முருகப்பெருமானை தரிசிக்க பழனி செல்பவர்கள் பஞ்சாமிர்த பிரசாதத்தை வாங்க தவறுவதில்லை.

உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பழனிக்கு வந்து பஞ்சாமிர்தத்தை விரும்பி வாங்கி செல்கின்றனர். ஆனால் பழனிக்கு வர முடியாதவர்களுக்கு பழனி முருகன் கோவில் பிரசாத தொகுப்பு அவர்களின் வீடு தேடி செல்வது உண்மையிலேயே சிறந்த சேவை தான்.

மாரிமுத்து (ஓய்வு பெற்ற கூட்டுறவு அச்சக பணியாளர், திண்டுக்கல்) :- திண்டுக்கல் மாவட்டத்தில் கோவில் பிரசாதம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது பழனி பஞ்சாமிர்தம் தான். அதேபோல் வெளிமாநில கோவில் என்றால் திருப்பதி லட்டு பிரசாதம், சபரிமலை அரவணை பிரசாதம் ஆகியவை பக்தர்கள் விரும்பி வாங்கும் பிரசாதமாகும். பழனி பிரசாத தொகுப்பு தபால் மூலம் பக்தர்களின் வீட்டுக்கே சென்று வழங்குவது வரவேற்கத்தக்கது. அதேபோல் பிற கோவில்களில் வழங்கப்படும் சிறப்பு வாய்ந்த பிரசாதங்களை பக்தர்கள் மத்தியில் பிரபலப்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்

கவுதம் (பக்தர், ஈரோடு) :- பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மாதத்துக்கு ஒரு முறையாவது வந்துவிடுவேன். அவ்வாறு வரும்போது எனது நண்பர்கள், உறவினர்களுக்கு பஞ்சாமிர்தம் வாங்கி செல்வேன். அதேபோல் அக்கம்பக்கத்தினர் என்னிடம் பணம் கொடுத்து பஞ்சாமிர்தம் வாங்கி வர சொல்லுவார்கள். ஆனால் தபால் மூலம் பழனி கோவில் பிரசாதமான பஞ்சாமிர்தம் பெறலாம் என்பது எனக்கே தெரியாது.

நான் மட்டுமல்ல பலருக்கும் இதுபோன்ற கோவில் பிரசாதங்கள் தபால் சேவை மூலம் பெற முடியும் என்பது தெரியாமல் உள்ளது. எனவே தமிழகத்தின் முக்கிய கோவில்களின் பிரசாதங்கள் தபால் சேவையின் மூலம் பெறலாம் என்பது குறித்து பக்தர்களுக்கு அறநிலையத்துறை தெரியப்படுத்த வேண்டும். இதுதொடர்பான அறிவிப்பு பலகையை அனைத்து தபால் அலுவலகங்களிலும் வைக்கலாம்.

சோம்பேறியாகி விடுவார்கள்

விஜய் (பூ வியாபாரி, நத்தம்) :- பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்துவதே சிறந்தது. கோவிலுக்கு வந்து பூ, பழம், துளசி, தேங்காய் வாங்கி அர்ச்சகரிடம் கொடுத்து இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதே சிறந்த பலனை கொடுக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. மேலும் கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களையும் பக்தர்கள் வாங்கி சாப்பிடுவது வழக்கம். கோவிலுக்கு வந்து வழிபடுவதால் நமது மனதுக்கு அமைதி கிடைக்கிறது. அதை விடுத்து ஆன்லைனில் பிரசாதத்தை ஆர்டர் செய்து தபால் மூலம் பிரசாதத்தை பெற்று சாப்பிடும் முறை தொடர்ந்தால் ஏற்கனவே செல்போனில் முடங்கி கிடக்கும் இளைஞர்கள் மேலும் சோம்பேறி ஆகிவிடுவார்கள்.

வரப்பிரசாதம்

பரசுராமன் (உத்தமபாளையம் ஓம் நமோ நாராயணா சபையின் செயல் தலைவர்):- தற்போது உள்ள கால கட்டத்தில் குடும்பத்தோடு அடிக்கடி கோவிலுக்கு செல்வது இயலாத காரியமாக உள்ளது. போக்குவரத்து செலவு உள்பட பல செலவுகளுக்கு பணம் முக்கியமாக இருக்கிறது. கோவிலுக்கு சென்று காணிக்கை செலுத்திய காலம் மாறி, தற்போது வீட்டில் இருந்தபடியே கோவிலுக்கு காணிக்கை, நன்கொடை செலுத்த வாய்ப்பு அமைந்துள்ளது. அது வரவேற்கத்தக்கது.

இதேபோல், பிரசாதமும் வீட்டில் இருந்தபடியே விரைவு தபால் மூலம் பெறும் திட்டம் மகத்தான திட்டம். இதன் மூலம் நமக்கு தேவையான பிரசாதத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். இது என்னைப் போன்ற எண்ணற்ற பக்தர்களுக்கு வரப்பிரசாதம் போன்றது. கோவிலுக்கு நேரில் சென்று பிரசாதம் வாங்க முடியாத ஏக்கத்தை இது பூர்த்தி செய்யும். அதேநேரத்தில் பிரசாதத்தை தாமதமின்றி ஓரிரு நாட்களில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றார்.

காலதாமதமின்றி...

அன்பழகன் (தொழிலாளி, உப்புக்கோட்டை):- பழனிக்கு நேரில் செல்ல முடியாத போது, பஞ்சாமிர்தம் வாங்க வேண்டும் என்றால் பழனிக்கு செல்லும் பக்தர்களிடம் பணம் கொடுத்து விடுவேன். சில நேரம் நண்பர்கள் வாங்க மறந்து விடுவார்கள். அது ஏமாற்றமாக இருக்கும். ஆனால், தற்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்து விரைவு தபால் மூலம் கோவில் பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம் என்ற திட்டத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இனி விரும்பிய நாளில் பிரசாதத்தை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். கோவில் பிரசாதம் என்பதால் முழுமையாக நம்பி அதை மக்கள் சாப்பிடுகின்றனர். எனவே அதை சுகாதாரமான முறையிலும், கால தாமதமின்றியும் அனுப்பி வைக்க வேண்டும்' என்றார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அறநிலையத்துறை

இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, 'தமிழ்நாட்டில் உள்ள 48 முதுநிலை கோவில் பிரசாதங்களை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் துறை மூலம் அனுப்பி வைக்கும் திட்டத்திற்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. பிரசாதம் தேவைப்படும் பக்தர்கள் அந்தந்த கோவில் இணையதள முகவரிக்கு சென்று கோவில் முகவரியை பெற்றுக்கொண்டு, அதில் வீட்டு முகவரி மற்றும் ஆன்லைனில் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஓரிரு நாட்களில் பிரசாதம் பக்தர்களின் வீடு தேடி வரும். இதற்காக ஒவ்வொரு கோவிலிலும் தனியாக பணியாட்கள் நியமிக்கப்பட்டு திட்டம் திறம்பட செயல்படுத்தப்படுகிறது. கட்டணத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு கோவிலுக்கும் மாறுபடுகிறது.

குறிப்பாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.250 செலுத்தினால் பஞ்சாமிர்த டப்பா, விபூதி, குங்குமம், விபூதி, குங்குமம், சந்தனம் மற்றும் கோவில் பூஜை முறைகள், ஸ்தல வரலாறு, பூஜைகளுக்கான கட்டண விவரம் அடங்கிய புத்தகம் அனுப்பப்படுகிறது.

அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் பிரசாதம் தேவைப்படுபவர்கள் ஆன்லைன் மூலம் ரூ.160-ஐ கோவிலுக்கு ஆன்லைன் மூலம் செலுத்தினால் 150 கிராம் எடையுள்ள 10 தட்டு வடை, விபூதி, குங்குமம், ஆஞ்சநேயர் சாமியின் உருவப்படம் ஆகியவை பிரசாதமாக அனுப்பி வைக்கப்படும்.

இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மேலும் அதிக எண்ணிக்கையிலான கோவில்களில் பிரசாதம் அனுப்பும் திட்டம் விரிவுப்படுத்தப்படும். பக்தர்கள் தங்கள் திருமண நாள், பிறந்த நாள், பெற்றோர்கள் பிறந்த நாள், கணவன்-மனைவி- குழந்தைகள் பிறந்த நாட்களில் விரும்பும் கோவில்களின் (48 கோவில்கள்) பிரசாதங்களை தபாலில் பெற்று இறையருள் பெறலாம். இந்த திட்டம் மூலம் கோவிலுக்கு வருமானமும் வரும், பக்தர்களுக்கு மனதிருப்தியும் ஏற்படும்' என்றார்.

----------------

Tags:    

மேலும் செய்திகள்