காணியாளம்பட்டி அண்ணமார் கோவில் கும்பாபிஷேக விழா

காணியாளம்பட்டி அண்ணமார் கோவில் கும்பாபிஷேக விழாதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2023-07-05 20:09 GMT

தேவூர்

தேவூர் அருகே காணியாளம்பட்டி அண்ணமார் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காணியாளம்பட்டி

சேலம் மாவட்டம் தேவூர் அருகே காணியாளம்பட்டி அண்ணமார் கோவில் பகுதியில் சரபங்கா நதி காவிரி ஆற்றில் கலந்து செல்லும் இடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற 100 ஆண்டு பழமையான பெரிய காண்டி அம்மன், அண்ணமார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தது. புதிதாக சாமி சிலைகள், குதிரை சிலைகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் வடிவமைக்கப்பட்டன. மேலும் சாமிகளுக்கு தனித்தனி சன்னதிகளும் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்வாக முகூர்த்தக்கால் போடுதல், முளைபாலிகை போடுதல், கங்கணம் கட்டுதல், கோபுர கலசம் வைத்தல், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல், சாமி எடுத்து வைத்தல், 4-ம் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடந்தது.

கும்பாபிஷேகம்

இதையடுத்து விநாயகர், அண்ணமார் மகா முனியப்பன், கன்னிமார், பெரியகாண்டியம்மன் ஆலய கோபுரத்தில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் ராஜப்ப குருக்கள், பாரூர் சின்னமடம் பாஸ்கர் தீட்சதர் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவிலை சுற்றி நின்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

பின்னர் பெரியகாண்டியம்மன் அண்ணமார் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகம், தீபாராதனை வழிபாட்டு பூஜை நடந்தது. இதில் சேலம், வட்டக்காடு, காணியாளம்பட்டி, அண்ணமார் கோவில், புதுப்பாளையம், தேவூர், அம்மாபாளையம், கல்லியங்காடு, குமாரபாளையம், சங்ககிரி, திருப்பூர், ஊத்தங்கரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா பெரியண்ணன், சாத்தந்தை கூட்ட காணியாளர்கள், ஊர் பொதுமக்கள் திரளானோர் செய்து இருந்தனர். விழாவையொட்டி தேவூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்