வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம்

வடமதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-25 21:00 GMT

வடமதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகம்

வடமதுரையில் பிரசித்திபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், விநாயகர், கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளியடி குருநாதர் என்பவரால் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் போதிய பராமரிப்பின்றி கோவில் கோபுரங்கள் சிதிலமடைந்து காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு கோவிலில் பாலாலய பூஜையுடன் திருப்பணி தொடங்கியது. 2 ஆண்டுகளாக நடைபெற்ற திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த 14-ந்தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றன.

இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் புனிதநீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோவில் கோபுரத்தை அடைந்தன. அதன்பின்னர் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் 'ஓம் நமசிவாய...' என்று கோஷங்கள் எழுப்பி பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

அன்னதானம்

இந்த விழாவில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன், கரூர் எம்.பி. ஜோதிமணி, இந்துசமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பாரதி, வடமதுரை ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பையன், நகர செயலாளர்கள் கணேசன் (வடமதுரை), கருப்பன் (அய்யலூர்), முன்னாள் ஊராட்சி செயலாளர் இளங்கோ, நெசவாளர் அணி அமைப்பாளர் சொக்கலிங்கம், பொருளாளர் முரளிராஜன், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், வடமதுரை பேரூராட்சி தலைவர் நிருபாராணி, செயல் அலுவலர் கல்பனாதேவி, ஸ்ரீபொன் ஆபரண தர்மசாஸ்தா அறக்கட்டளை குருசாமி காமராஜ், வடமதுரை கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, பரமசிவம் மற்றும் வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், திருப்பணிக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்