ஆண்டிப்பட்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஆண்டிப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் 400 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 3 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று காலை சிறப்பு பூஜையுடன் கடம்புறப்பாடு நடைபெற்றது.
அப்போது பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்கள் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்பிறகு கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது வானில் கருடன் வட்டமிட்டது. இதனை பார்த்து அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர். இதையடுத்து அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
பின்னர் கோவிலில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், பழம், தயிர், சந்தனம், இளநீர், குங்குமம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன் மற்றும் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
இந்த விழாவில் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் இதில், ஆண்டிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் பாலமுருகன், பாரத் தட்டச்சு பயிற்சி பள்ளி நிறுவனர் மாரிராஜா, கீதாஞ்சலி நகைக்கடை உரிமையாளர்கள் தண்டாயுதபாணி, ராம்சிவா, வெங்கடேஸ்வரா நகைக்கடை உரிமையாளர் ரமேஷ், சரவணா ஜவுளிக்கடை உரிமையாளர் பாலசுப்பிரமணி, ஸ்ரீதேவி ஜவுளிக்கடை உரிமையாளர் விசுவநாதன் மற்றும் ஆண்டிப்பட்டி பகுதி பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் காந்திமதி நாதன், பூசாரி கணேசன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.