திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

Update: 2022-10-31 16:49 GMT

திண்டுக்கல் அருகே திருமலைக்கேணியில் பிரசித்திபெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. அப்போது சூரர்களை சக்திவேல் கொண்டு முருகப்பெருமான் வதம் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

இந்தநிலையில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதி முன்பு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் மண்டபத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமரவைக்கப்பட்டு முருகப்பெருமான்-வள்ளி, தெய்வயானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது அங்கு குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா கோஷமிட்டனர். பின்னர் திருமண கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். அப்போது பக்தர்கள் தட்டுகளில் வேட்டி, பட்டு புடவை, பழங்கள், பூக்கள் என சுவாமிக்கு திருமண சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்து, அதனை காணிக்கையாக செலுத்தினர். முடிவில் கோவிலின் சஷ்டி மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்