ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம்

ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

Update: 2023-04-25 21:00 GMT

ஆண்டிப்பட்டி அருகே ஜம்புலிபுத்தூரில் பழமை வாய்ந்த கதலி நரசிங்கபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி கொடிமரத்தின் முன்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றனர். மேலும் பூர்ணாகுதி, வாஸ்து சாந்தி மற்றும் பிரவேச பலி ஆகியவை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சக்கரத்தாழ்வார் எதிர்சேவை புரிய கொடிமரத்தில் பட்டம் கட்டப்பட்டது. அப்போது பட்டத்திற்கு பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு கொடியேற்றம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

கொடிமரத்தில் பட்டம் ஏறிய சிறிது நேரத்தில் ஜம்புலிபுத்தூரில் பலத்த மழை பெய்தது. இதனால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 5-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தினர் செய்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்